தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் நியமனம்?
பா.ஜ.க. தேசிய தலைமை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தலை நடத்தி, அதற்கேற்ப மாநிலத் தலைவர்கள் மற்றும் கட்சி கவுன்சில் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக பா.ஜ.க. தலைமை பொறுப்பாளர்களை நியமிக்கும். இந்த நிலையில், தமிழகத்திற்கு இன்னும் ஒன்றைரை ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பதவிக்காலம் முடிவடைய உள்ளதை அடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி வரும் 17 ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னையில் இரண்டு நாள்கள் தங்கும் கிஷன் ரெட்டி, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அடுத்த மாநிலத் தலைவர் தொடர்பான அறிக்கையை கட்சி தலைமையிடம் அளிப்பார் என்றும் அதற்கு பின்னர் தமிழக பா.ஜ.க. தலைவரை பா.ஜ.க. தேசிய தலைமை அறிவிக்கும் என கூறப்படுகிறது.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் பெயர்ப் பட்டியலில் அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் நயினார் நாகேந்திரன் பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.