இன்று முதல் சூப்பர் திட்டம் அமல்... இனி சில்லறை பிரச்சினையே இல்லை..!
சென்னையை பொறுத்தவரை மெட்ரோ, புறநகர் மின்சார ரயில் சேவை, மாநகர பஸ்கள் என மூன்று வகையான பொது போக்குவரத்து வசதி உள்ளது. தற்போதைய நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி பயணிகளின் சிரமத்தை குறைக்க பல படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் பயணிக்க ஒரே அட்டை மூலம் பயணச்சீட்டு பெறும் திட்டத்தை அமல்படுத்த அதிகரிகள் திட்டமிட்டனர். இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக முழு வீச்சில் நடைபெற்று வந்தது. தற்போது, மெட்ரோ, புறநகர் மின்சார ரயில், பேருந்து என மூன்று வகையான பொதுப்போக்குவரத்தை ஒருவர் பயன்படுத்தினாலும் மூன்றிற்கும் தனித்தனியாக டிக்கெட் எடுத்து செல்கிறார்கள். இப்படி தனித்தனியாக பயண சீட்டு எடுப்பதற்கு பதிலாக ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பொதுப்போக்குவரத்தை பயணிகள் பயன்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்தது.
புறநகர் ரயில்வே நிர்வாகத்துடன் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டு திட்டம் மெட் ரோ ரயில்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் இன்று (திங்கள் கிழமை) முதல் மாநகர பேருந்துகளிலும் இந்த அட்டையை பயன்படுத்தி பயணிக்கும் வசதி கொண்டு வரப்பட உள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பல்லவன் பணி மனையில் வைத்து, இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இன்று முதல் மெட்ரோ ரயில்கள் மட்டும் இன்றி பேருந்துகளிலும் இந்த அட்டையை பயன்படுத்தி பயணிக்க முடியும்.
சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டை மெட்ரோ நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள மெஷினில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்கலாம்.. மின்சார ரயில்களில் இந்த கார்டை ஸ்கேன் செய்து கொள்ள முடியும். அரசு பஸ்களில், கண்டக்டர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, கண்டக்டர்களிடம் உள்ள ஸ்கேன் மெஷினில் ஸ்கேன் செய்து பயணத்தை செய்யலாம்.இதன் மூலம் பஸ்களில் டிக்கெட் எடுக்கும் போது சில்லறை இல்லை என கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. முதல் கட்டமாக 50 ஆயிரம் அட்டைகள் ஸ்டேட் வங்கி மூலம் கட்டணம் இன்றி வழங்கப்படுகிறது. நாளை முதல் கோயம்பேடு, பிராட்வே பேருந்து நிலையங்களில் வினியோகம் செய்யப்பட உள்ளது.