நடிகர் சங்க தேர்தலால் நாட்டு மக்களுக்கு நலம் பயக்குமா?

இது போன்று நடிகர் சங்க தேர்தல் இல்லாததற்கு காரணம் மக்கள் எதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை ஊடகங்கள் முடிவு செய்வது தான். ஆனால் இது நீண்டகாலத்திற்கு நீடிக்காது என்பதே நிதர்சனம்.
 | 

நடிகர் சங்க தேர்தலால் நாட்டு மக்களுக்கு நலம் பயக்குமா?

இந்தியாவில் சங்கம் இல்லாத ஜனங்களே இல்லை. நாட்டின் ஒவ்வொரு நொடியிலும் ஏதாவது ஒரு மூலையில் ஒவ்வொரு மணிக்கு ஏதோ ஒரு சங்க கூட்டமோ, அதற்கான தேர்தலோ நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இது எதுவும் வெளியே தெரிவதில்லை. 

நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபைத் தேர்தல் கூட சுமார் 2 மாத காலத்தில் முடிவுக்கு வந்துவிடுகிறது. 110 கோடிப் பேரின் தலைவிதியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு எழுதப்போகின்ற லோக்சபா தேர்தலுக்கு இணையான ஆர்ப்பாட்டம், தற்போது நடிகர் சங்கத் தேர்தலில் வெளிப்படுகிறது. கடந்த தேர்தல் தொலைக்காட்சிகள் புண்ணியத்தில் முக்கிய இடத்தை பிடித்த நிலையில், சமூக ஊடகங்கள் அந்த இடத்தை பிடித்துக் கொண்டுள்ளன.

தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கம் அல்லது தென்னிந்திய நடிகர் சங்கம், 1952ம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போது ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில நடிகர்களையும் இணைத்து உருவானது இது. பின்னர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக சங்கம் ஏற்பட்ட பின்னர் இது மட்டும் தமிழ் நடிகர்கள் சங்கமாக மாறாமல் அப்படியே தொடர்கிறது. இந்த பெயர் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கூட வற்புறுத்தப்பட்டது.

இந்த சங்கத்தில் எம்ஜிஆர், என்எஸ் கிருஷ்ணன், கே சுப்பிரமணியன் ஆகியோர் மூத்த உறுப்பினர்களாக இருந்துள்ளனர். மூத்த நடிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், நடிகர்களின் பாதிப்புக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த சங்கம் தொடங்கப்பட்டது. இதன் முதல் தலைவராக டிவி சுந்தரம், துணைத்தலைவர்களாக எம்ஜிஆர், சுப்புலட்சுமி, எஸ்டி சுந்திரம் மற்றும் வேம்பு ஆகியோர் செயல்பட்டனர்.

இந்த காலத்திலேயே 2000 சதுர அடியில் இடும் வாங்கப்பட்டது. அதில் 1977ம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வர் ஆன பிறகு கட்டடம் கட்ட ஒப்புதல் அளித்தார். அதன் பின்னர் சிவாஜி தலைவராகவும், மேஜர் சுந்தர்ராஜன் செயலாளராக இருந்த காலத்தில் வருமானம் தரக் கூடிய வகையில் ஒரு கட்டடம் கட்டப்பட்டது.

1990களில் அப்போதைய தலைவராக இருந்த ராதாரவிக்கு எதிராக நடிகர்கள் சங்கத்திற்குள் ஒரு போராட்டம் வெடித்தது. இதுவும் பணவிவகாரம் தான். அதன் பின்னர் விஜயகாந்த் ஏகமனதாக  தலைவராக. ...தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது நடிகர் சரத்குமார் பொதுச்செயலாளராக இருந்தார். விஜயகாந்த்  நடிகர் சங்கம் வாங்கிய ரூ. 2 கோடி கடனை அடைத்தார்.

இந்த காலகட்டதிலும், அதற்கு அடுத்த தேர்தலும் நடிகர் சங்க தேர்தல் என்பது மற்ற சங்கங்க தேர்தல் போலதான் நடந்தது முடிந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவிக்கு எதிராக பாண்டவர் அணி என்ற பெயரில் ஒரு அணி களம் இறங்கியது. அவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதாலும், தொலைக்காட்சிகளின் பார்வை நடிகர்கள் சங்கத்தின் மீது விழுந்ததாலும், இது ஏதோ நாட்டின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் தேர்தலாக மாறியது. ஓட்டுப்பதிவு நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இந்த அளவிற்கு தொலைக்காட்சிகள் இதில் ஆர்வம் காட்டியது.

இந்நிலையில் தான் மீண்டும் 23ம் தேதி நடிகர் சங்கத்தேர்தல் நடக்கிறது. இந்த முறை தொலைக்காட்சிகளுடன் சமூக ஊடகங்களும் சேர்ந்து கொண்டு இந்த தேர்தலையே மிகப் பெரிய விவாதப் பொருளாக மாற்றிவிட்டது.

அந்த அளவிற்கு நடிகர் சங்கம் ஒன்றும் நாட்டின் முக்கிய சங்கம் இல்லை. மேலும் ஓட்டு அளிக்கப் போகும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 3300க்கும் கொஞ்சம் அதிகம். அதையும் தாண்டி இந்த தேர்தலின் மையக்கருத்தாக இருப்பது நடிகர் சங்கத்திற்கான சொந்த கட்டிடம் என்பது தான்.

கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஒரு அலுவலகம் கட்ட முன்வருவதில்லை என்ற .வேதனையான விஷயம் மறக்கடிக்கப்பட்டு, ஏதோ மார்க்கெட் இழந்த நாடக நடிகர்கள் முயற்சி செய்வது போல இருக்கிறது.

நாடக நடிகர்களின் மையமாக திகழ்வது புதுக்கோட்டை, இங்கு இது போன்ற எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நாடக நடிகர்கள் தங்களுக்கு என்று சொந்த அலுவலகம் கட்டி இருக்கிறார்கள் என்பதை கவனிதால் திரை நடிகர்கள் எந்த அளவிற்கு சுய நலவாதிகள் என்று தெரியும்.

இன்றைக்கு நாடக நடிகர்கள் நல்வாழ்வு பேணப்படும் என்று இரு அணியினரும் கூறுகின்றனர். தற்போதுள்ள நிலையில் நாடக நடிகர்கள் உட்பட அனைவரும் ரூ. ஒரு லட்சம் கொடுத்தால் தான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவே முடியும். ஒரு நாள் நாடகத்திற்கு ரூ. 5 ஆயிரம் கிடைத்தாலே பெரியவிஷயம். ஒரு ஆண்டிற்கு அதிகபட்சம் 30 அல்லது 35 நாடகங்கள் தான் ஒரு நடிகர் நடிக்க முடியும். நலிவுற்ற நாடகக் கலைஞர்கள் என்று கண்ணீர் விடும் நடிகர் சங்கத்தினர் அவர்கள் உள்ளே கூட வரமுடியாத அளவிற்கு கட்டணம் வைத்துள்ளனர்.

நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக இலவசமாக படம் நடிப்போம் என்று உறுதியளித்த நடிகர் விஷால் இதுவரை அந்த முயற்சியில் ஈடுபடவே இல்லை. சொன்ன சொல்லை காப்பாற்றும் வகையில் அவரும், ரஜினி, கமல், அஜித், விஜய் போன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களும் ஆளுக்கு ஒரு படம் செய்தால் போதும் நடிகர் சங்க கட்டடம் எப்போதோ உருவாகி இருக்கும். அதை இவர்கள் செய்யவில்லை என்ற போதே இவர்கள் எவ்வளவு பெரிய நடிகர்கள் என்பது வெளிப்படுகிறது.

அதே போல நடிகர் சங்கம் தவிர்த்து பிஆர்ஓ சங்கம், லைட்பாய் சங்கம், துணை நடிகர்கள் சங்கள், பெப்சி, தயாரிப்பார்கள் சங்கம் என திரைத்துறையில் எல்லா பிரிவுக்கும் ஒரு சங்கம் இருக்கிறது. சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஏகமனதாக பாரதிராஜா தேர்வு பெற்றிருகிறார். இந்த தேர்தல் எவ்விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கடந்து சென்றது.

இது போன்று நடிகர் சங்க தேர்தல் இல்லாததற்கு காரணம் மக்கள் எதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை ஊடகங்கள் முடிவு செய்வது தான். ஆனால் இது நீண்டகாலத்திற்கு நீடிக்காது என்பதே நிதர்சனம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP