Logo

நதி நீர் இணைப்புத் திட்டம் அவசியமா, ஆபத்தா? பகுதி - 2

காவிரி டெல்டா பகுதிகளில் வசிப்பவர்களிடம் விசாரித்துப் பாருங்கள், கடலை ஒட்டிய பகுதியின் மண் எல்லாம், முன்பு போல் இல்லாமல், வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறி இருப்பதைச் சொல்வார்கள். (இன்னும் கூட அந்த மண்வளம் கொஞ்சம் உயிர்ப்புடன் இருப்பதற்கான காரணத்தை பின்னாடி விரிவாகப் பார்க்கலாம்)
 | 

நதி நீர் இணைப்புத் திட்டம் அவசியமா, ஆபத்தா? பகுதி - 2

ஆற்று நீர் கடலில் கலக்காவிட்டால் என்னவாகும்? 

நன்னீர் கலக்காததால் கடல் நீரின் உவர்ப்பு அதிகமாகி விடுகிறது. அதனால், அந்தப் பகுதியிலுள்ள நிலத்தடி நீரினை உறிஞ்சிக் கொள்கிறது. இது காலப்போக்கில், கொஞ்சம் கொஞ்சமாக, கடற்கரை பகுதியையும் விட்டு, மைய நிலத்து நீரினையும் உறிஞ்ச ஆரம்பிக்கும். 

அப்பொழுது, நிலம் வரண்டு போவதை விட, மண்ணின் தன்மை மாறிவிடும் அதாவது pH அளவு சிதைந்து அமிலத்தன்மை கொண்ட மண்ணாக மாறிவிடும். அப்புறம் விவசாயம் விளங்காமல் போய் விடும். அந்தப் பகுதி நிலங்கள், கொஞ்சம் கொஞ்சமாகப் பாலைவனமாகும்.

நான் சொல்வதை விட, நீங்களே இந்தப் படங்களை ஒரு முறை பார்த்து விடுங்கள்.

படம் 1 – தாமிரபரணி கலக்கும் இடம் :

நதி நீர் இணைப்புத் திட்டம் அவசியமா, ஆபத்தா? பகுதி - 2

தாமிரபரணி நீளம் குறைந்த ஆறு. ஆகவே, பெரிய தடுப்பணைகள் ஏதும் இல்லாததால், ஓரளவு நிறையவே ஆற்று நீர் கடலில் கலக்கிறது. அதனால், அந்தப் பகுதியில் மண்ணின் தன்மை மாறாமல், இன்னும் சிறப்பாக விவசாயம் நடந்து வருகிறது. அடர்த்தியான பசுமையைப் பாருங்கள்.

 

படம் 2 – காவிரி கலக்கும் இடம் :

நதி நீர் இணைப்புத் திட்டம் அவசியமா, ஆபத்தா? பகுதி - 2

பெரிய நதி, கடலுக்கு பல கி.மீ., முன்னமே சிற்றாறுகளாகப் பிரிந்து ஓடைகள் போல் கடலில் பரவலாகக் கலக்கிறது. எனினும், முன்பு போல நிறைய நீர் கடலில் கலக்காததால், அடர் பசுமையாக இல்லாமல் வெளிர் பசுமையாக தோற்றமளிக்கிறது. 

காவிரி டெல்டா பகுதிகளில் வசிப்பவர்களிடம் விசாரித்துப் பாருங்கள், கடலை ஒட்டிய பகுதியின் மண் எல்லாம், முன்பு போல் இல்லாமல், வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறி இருப்பதைச் சொல்வார்கள். (இன்னும் கூட அந்த மண்வளம் கொஞ்சம் உயிர்ப்புடன் இருப்பதற்கான காரணத்தை பின்னாடி விரிவாகப் பார்க்கலாம்)

 

படம் 3 – வைகை கலக்கும் இடம் :

நதி நீர் இணைப்புத் திட்டம் அவசியமா, ஆபத்தா? பகுதி - 2

ராமநாதபுரம் மாவட்டத்தினை நேரில் பார்த்தவர்களுக்கு இதை விளக்க வேண்டிய அவசியம் இருக்காது. முன்பு ராமநாதபுரம் நகரம் வரை வறட்சியாக இருந்த பூமி, இப்பொழுது பரமக்குடி தாண்டி மானாமதுரை வரை பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது. 

காரணம், திருபுவனம், திருப்பாச்சேத்தி தாண்டி, வைகை நீர் பாய்வதே இல்லை. கடலுக்கு ஆற்று நீர் போகாததால்  கடல் நீர் உவர்ப்பு கூடி, நிலத்தடியிலிருக்கும் நீரை உறிஞ்சிக் கொண்டே இருக்கிறது. இது தொடர்ந்தால், இப்பொழுது விளையும் சீமைக்கருவேல மரங்கள் கூட, இன்னும் சில வருடங்களில் வளராமல் போய்விடும்.

ஆகவே மக்களே… கடலில் நதி நீர்/நன்னீர் கலக்காவிட்டால்  மண் மலடாகும். நிலத்தடி நீர் உவர்ப்பாகும், வேளாண்மை வேடிக்கையாகி விடும்.

 

அடுத்ததாக…
கடலில் நதி நீர் கலக்காவிட்டால், மழை பெய்வது நின்று விடுமா?

நதி நீர் இணைப்புத் திட்டம் அவசியமா, ஆபத்தா? பகுதி - 2

இரண்டு ஒரே அளவுள்ள தட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டிலும் நூறு மி.லி., நல்ல தண்ணீரை ஊற்றுங்கள். அதில், ஒன்றில் ஐம்பது கிராம் உப்பினை கரைத்துவிடுங்கள். இப்பொழுது இரண்டையும் வெயிலில் வையுங்கள். முதலில் எந்தத் தட்டிலிருக்கும் தண்ணீர் ஆவியாகிறது என்று கவனியுங்கள். 

என்ன சார் இது, சின்னப் பசங்களுக்குப் பாடம் எடுக்கிற மாதிரி? என்று அங்கலாய்ப்பது புரிகிறது. அதே லாஜிக் தானே கடலிலும்? ஆற்று நீர் கடலில் கலக்கும் இடங்களில், கடல் நீரின் அடர்த்தி குறைவாக இருக்கும் தானே? அப்பொழுது அங்கேயிருந்து நீராவியாதல் அதிகமாக நடக்கும் இல்லையா? நீராவியாதல் அதிகம் நிகழ்ந்தால் தானே நீராவியாதல் அதிகமாக ஒருங்கிணைவு நிகழ்ந்து, மேகமாகி மலை / காடுகளை நோக்கி நகர்ந்து, குளிர்வுற்று மழையாகப் பொழிய முடியும்?

ஆகவே, என்னருமை மகாஜனங்களே… உங்களுக்கு நிறைய மழை வேண்டுமானால், கடலில் கலக்கும் நீர் என்பது அநாவசியம் என்று எண்ணுவதைத் தவிர்க்க வேண்டும். உடல் வெப்பத்தைச் சமப்படுத்த, உடலிலிருந்து வியர்வை வெளியாக வேண்டும். வியர்வை வெளியாக, உடலுக்குள் போதுமான அளவு நீர் அவசியம் இருக்க வேண்டும். 

அதற்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அநாவசியமாக வியர்வையாக நீர் வெளியேறுகிறதே என்று தண்ணீர் குடிக்காமல் இருந்தால், ரத்தத்தில் அளவு மாறி மொத்த வியாதியும் வந்து உடலை விட்டு உயிர் கிளம்ப வேண்டிய நிலை வந்து விடும். அது போன்றது தான், கடலில் கலக்கும் நன்னீர் உபரி நீர்  என்று எண்ணுவது.

நதி நீர் இணைப்புத் திட்டம் அவசியமா, ஆபத்தா? பகுதி - 2

அடுத்த பகுதியில், உணவு சுழற்சி மற்றும் நீர் சுழற்சி எப்படி தடைபடுகிறது என்றும், கடல்வாழ் உயிரினங்கள் எவ்வாறு பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறது என்றும் பார்ப்போம்.  அதன் பிறகு, நதி நீர் இணைபினைப் பற்றி பார்ப்போம்.

வாசிப்பவர்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். இந்தத் தொடரினை, அரசியல்ரீதியாகவோ, உணர்ச்சிவசமாகவோ, சித்தாந்தரீதியாகவோ பார்க்காமல்,  சாதாரண அறிவியல் பார்வை மற்றும் எதார்த்தப் பார்வை கொண்டு மட்டும் தொடர்ந்து வாசித்து வாருங்கள். கட்டுரையின் இறுதி பாகத்தில், வாசகர்களின் அனைத்து விதமான கேள்விகளுக்கும் முறையான நிதானமான விடைகளைத் தேடி விவாதிப்போம். 

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP