மீண்டும் மடையர்கள் ஆக்கப்படும் அரசு பள்ளி மாணவர்கள்

இதைத் தவிர தமிழகத்தில் தமிழ் வளர்ச்சி துறை இருப்பது போல மத்தியில் மொழி வளர்ச்சி துறை ஏற்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்றுக் கொடுக்கும் நடவடிக்கை எடுக்கலாம். இதன் மூலம் தேசத்தின் ஒற்றுமையை வலிமையாக்க முடியும். மத்திய, மாநில அரசுகள் இது போன்ற நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். அப்போதுதான் ஏழை மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும்.
 | 

மீண்டும் மடையர்கள் ஆக்கப்படும் அரசு பள்ளி மாணவர்கள்

மோடி எதிர்ப்பு வலுவாக உள்ள தமிழகத்தில், எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவது போல தேசிய கல்விக் கொள்கையின் வரைவு பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், இந்தி பேசாத மாநிலங்களி்ல் இந்தியையும், இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி கட்டாயம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை அரசு ஏற்காத நிலையிலேயே தமிழகத்தில் எதிர்ப்பு கோஷங்கள் பெருகி உள்ளன.

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம், 1937ம் ஆண்டிலேயே தொடங்கியது. அப்போது ராஜகோபாலசாரியார் தலைமையிலான அரசு, இந்தியை கட்டாயப்படாமாக்கியது. இதை நீதிக்கட்சி, ஈ.வெ. ராமசாமி ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர். 3 ஆண்டுகள் போராட்டம் நடந்தது. 2 பேர் இறந்தனர். 

பெண்கள், சிறுவர்கள் உட்பட 1,198 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து 1940ம் ஆண்டு சென்னை மாகாண ஆளுனர் எர்ஸ்கின் கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.

அடுத்த கட்டமாக இந்தியா சுந்திரம் பெற்ற பின்னர், அலுவல் மொழி குறித்த விவாதம் எழுந்தது. அதில் இந்தியை அலுவல் மொழியாகவும், 15 ஆண்டுகள் ஆங்கிலம் இணை அலுவல் மொழியாகவும் ஏற்கபட்டது.

சரியாக 15 ஆண்டுகள் கடந்ததும், மீண்டும் இந்தி மட்டுமே அலுவல் மொழியாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதற்கு ஒரு சில ஆண்டுகள் முன்பாகவே திக, திமுக, நீதிக்கட்சி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஜனவரி 26 1965 ம் ஆண்டுக்கு ஒரு சில மாதங்கள் முன்பே, இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் வலுத்தன. திமுக 1965ம் ஆண்டு குடியரசு தினத்தை கறுப்பு நாளாக கொண்டாட அழைப்பு விடுத்தது. மதுரையில் கல்லுாரி மாணவர்கள், போலீஸ் இடையே மோதல் ஏற்பட்டது. 

வன்முறை, தீவைப்பு, தடியடி, துப்பாக்கி சூடு என அனைத்தும் அரங்கேறின. இந்த போட்டத்தில் 2 காவல்துறையினர் உட்பட 70 பேர் இறந்ததாக அரசே ஒப்புக்கொண்டது. இதையடுத்து அப்போதைய பிரதமர் லால்பகதுார் சாஸ்திரி, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை அரசு பணிகளில் ஆங்கிலமும் இணைமொழியாக நீடிக்கும் என்று அறிவித்தார்.

அதன் பின்னர் நடந்த சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து இன்று வரை ஆட்சிக்கு வர முடியவில்லை. இதன் காரணமாக இந்தி எதிர்ப்பு நீர் பூத்த நெருப்பாக மாறிவிட்டது.

இன்னொரு புறம் கள்ளச்சாராயத்தை போக்கத்தான் டாஸ்மாக் கடைகளை நடத்துவதாக கூறுவதைப் போலவே, ஆட்சி மொழியாக இல்லாவிட்டாலும், இந்தி அடுப்படி வரை புகுந்து கொண்டுதான் உள்ளது. தொலைகாட்சிகளில் ராமாயணம், மகாபாரதம் சீரியல் ஒளிபரப்பான போது அதை பார்த்தே இந்தி படித்தேன் என்று தாங்களே புகழ்ந்து கொண்டவர்கள் பலர்.

அரசு பள்ளிகளில் இருந்து தங்களை மேம்படுத்தி காட்ட நினைக்கும் மெட்ரிக், சிபிஎஸ்சி பள்ளிகள் தாங்கள் இந்தி கற்றுக் கொடுப்பதை விளம்பரம் செய்தன. அதில் வசதி படைத்த தமிழர்கள் இணைந்து தங்கள் மொழியறிவை வளர்த்துக் கொண்டனர்.

இன்று தமிழ் எழுத, படிக்க தெரியாது என்று 2 தலைமுறைகள் உருவாகிவிட்டன. மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் மொழிப்பாடங்கள் தேவையற்றதாகிவிட்டது. எங்கள் வேட்பாளருக்கு இந்தி, ஆங்கிலம் நன்கு தெரியும் அதனால் வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. 

கடந்த காலத்தைவிட இப்போது இந்தி விவகாரத்தில் அதன் போலி எதிர்ப்பாளர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள். ஒரு புறம் வசதி படைத்தவன் இந்தி கற்க வாய்ப்பு ஏற்படுத்தி தரும் இவர்கள் தான் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் இந்தி படிக்க இயலாத வகையில் முடக்குகிறார்கள். அவர்கள் படிப்பது விருப்ப பாடம் என்கிறார்கள். அது இந்தி மேல் உள்ள விருப்பம் கிடையாது. இவர்கள் நடத்தும் பள்ளியில் இந்தி படிக்க வேண்டும் என்ற ஆசைதான்.

நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளும் 2 பேரில் ஒருவர் ஆங்கிலம், தமிழ் தெரியும், என்றும் மற்றொருவர் கூடுதலாக இந்தி தெரியும் என்று குறிப்பிட்டால்; தனியார் நிறுவனங்கள் பின்னவருக்கு தான் முன்னுரிமை தரும்.

தற்போது நீட் போன்ற ஒரு சில போட்டித் தேர்வுகள் தவிர்த்து மற்றவை ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே நடத்தப்படுகின்றன. 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியில் பாஸ் செய்து விட்டு, பின்னர் ஆங்கிலம் என்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு சிரமாக இருக்கும் நிலையில் போட்டித் தேர்வுகளின் வெற்றி கனவு தான்.

தமிழகத்தின் எந்த இடத்திலும் இந்தி படிக்க வாய்ப்பு இல்லாமல் செய்வது தான், தற்கால இந்தி எதிர்ப்பு. விரும்புகிறர்கள் மத்திய அரசு தபால் மூலம் நடத்தும் இந்தி பாடங்களை மட்டுமே படிக்கலாம். இந்த சூழ்நிலையில் தான் கிராமப்புற, நகர்புற மாணவர்கள் நேர்முகத் தேர்வை ஒரே தகுதியுடன் சந்திக்க முடியும். 

ஆங்கிலத்தில் முறையாக கருத்துக்களை வெளிப்படுத்த. தெரியாத காரணத்தால் லட்சகணக்கான இன்ஜினியர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இதன் மூலம் தமிழகத்தில் ஆங்கிலம் எவ்வாறு பரப்ப, பாதுகாக்கப்படுகிறது என்று அறியலாம்.

எனவே நவீன இந்தி எதிர்பாப்பாளர்கள் ஏழை மாணவர்கள் வேலை வாய்ப்பில் மண்ணைப் போடக் கூடாது.

மத்திய அரசு இந்தி பேசாத மாநிலங்களில் கிராப்ட் வகுப்பு, விளையாட்டு வகுப்பு, கிறிஸ்தவ பள்ளிகளில் நடக்கும் வேதாகம வகுப்பு போல இந்தியை அறிமுகம் செய்யலாம். அது எந்த வகையிலும் தேர்வின் முடிவை பாதிக்க கூடாது. விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்திற்கு சலுகை வழங்குவது போல ஒரு மதிப்பெண் கூடுதலாக கொடுக்கலாம்.

மேலும் தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்தி பேச வைக்கும் முயற்சியை இந்தி பேசும் மாநிலங்களில் தமிழ் உட்பட மற்ற மொழிகளை பேசவைக்கும் முயற்சியில் இருந்து தொடங்கலாம்.

இதைத் தவிர தமிழகத்தில் தமிழ் வளர்ச்சி துறை இருப்பது போல மத்தியில் மொழி வளர்ச்சி துறை ஏற்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்றுக் கொடுக்கும் நடவடிக்கை எடுக்கலாம். இதன் மூலம் தேசத்தின் ஒற்றுமையை வலிமையாக்க முடியும். மத்திய, மாநில அரசுகள் இது போன்ற நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். அப்போதுதான் ஏழை மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP