கூட்டணி பொருள் தெரியுமா டாக்டர் ஐயா...!

பாமக கடந்த தேர்தலைப் போல இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். அனைவரின் வெற்றி என்பதுதான் கூட்டணியின் இலக்கு. அதை உணர்ந்து பாமக செயல்பட வேண்டும். உங்கள் உழைப்புக்கு பரிசாகத்தான் அமைச்சர் பதவி கிடைக்கும்.
 | 

கூட்டணி பொருள் தெரியுமா டாக்டர் ஐயா...!

மியூசிக்கல் சேர் விளையாட்டில் பாடலை நிறுத்திய சில நிமிடங்களில் போட்டியாளர்கள் ஆளுக்கு ஒரு திசையாக ஓடிச் சென்று நாற்காலியில் அமர முயற்சி செய்வார்கள். ஒரே நேரத்தில் ஒரே நாற்காலியில் அமர்ந்து விட்டால் ஒருவர் மற்றவரை முழங்கையால் இடுப்பில் தள்ளி வெளியேற்ற முயல்வார்கள். 

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படும் நிலையில் மியூசிக்கல் சேர் விளையாட்டைப் போலவே அதிமுக, திமுக இரு தோள்களை நோக்கி ஓடத் தொடங்கி உள்ளன. ச்சீ ச்சீ நீ வேண்டாம் என்றவர்களும், மற்றவர்களுடன் போட்டியிட்டு ஓடி நாற்காலியை பிடிக்க முடியாதவர்களும் தனியே களம் இறங்க உள்ளனர். இவர்கள் வெற்றி பெறாவிட்டாலும், மற்றவர்களை தோற்கடிக்கும் நிலையில் இல்லாத காரணத்தால் இது போன்ற கட்சிகளை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.
 
ஆனால் திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு அதில் உள்ள கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம். ஆனால் இதை பாமக முழுமையாகத் தருமா என்பது தான் கேள்விக்குறி?

கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் பாஜக தேமுதிக பாமக, மதிமுக, இந்திய ஜனநாய கட்சி, கொங்கு மக்கள் தேசம் கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் முதலிடத்தில் தேமுதிக 14 இடங்களிலும், 8 இடங்களில் போட்டியிட்ட பாமக இரண்டாவது  இடத்திலும் இருந்தன. பாஜக மதிமுக தலா 7 இடங்களிலும் மற்ற கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டது. 

தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர்கள், வைகோ, விஜயகாந்த் ஆகியோர் தெருத்தெருவாக சுற்றி வந்து பிரச்சாரம் செய்தனர். விஜயகாந்த் பாமக தொகுதிகளில் தன் கட்சி வேட்பாளர் போட்டியிட்ட தொகுதிக்கு இணையாக பிரச்சாரம் செய்தார்.
 
ஆனால் பாமகவினர் தர்மபுரியை விட்டு வெளியே வரவே இல்லை. சுற்றி சுற்றி வந்து அன்புமணியை மட்டும் வெற்றி பெற வைத்தனர். தமிழகம் முழுவதும் ஜெயலலிதா வெற்றி பெற்ற நிலையில் தருமபுரியில் மட்டும் அன்புமணி வெற்றி பெற்றார் என்றால் அது எப்படிப்பட்ட நிகழ்வு என்று அறிந்து கொள்ள முடியும்.
 
தருமபுரியில் பாமக பல ஆண்டுகளாகவே பாமக பிரச்சாரம் செய்து அங்கு சிறப்பான களத்தை உருவாக்கி இருந்தாலும், அதனை மேலும் சிறப்பாக்கும் வகையில் கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு தந்தன. 

கூட்டணிக் கட்சிகளின் உழைப்பில் 10 சதவீதத்தையாவது பாமக வழங்கியிருந்தால் தேமுதிக ஒரு சில இடங்களிலாவது வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் நீ உமி கொண்டு வா, நீ அரிசி கொண்டு வா 3 பேரும் ஊதி ஊதி தின்னலாம் என்பதைப் போன்று பாமகவின் நிலைப்பாடு இருந்தது. 

கூட்டணி பொருள் தெரியுமா டாக்டர் ஐயா...!

இதையெல்லாமல் தாண்டி அன்புமணி வெற்றி பெற்ற பின்னர் கூட உப்பு சப்பு இல்லாத காரணத்தை கூறி கூட்டணியை விட்டு வெளியேறினார்.  மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜகவிற்கும் இவரின் வெற்றி பலன் கொடுக்கவில்லை. தருமபுரிக்கு லாபம் கிடைத்தா என்பதை அந்த தொகுதி மக்கள் நன்கு அறிவார்கள்.
  
2019 லோக்சபா தேரத்தலிலும் அதே கட்சிகள் மீண்டும் ஒன்றாக இணையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மதிமுக இல்லாத குறையை அதிமுக போக்கிவிடலாம். மிகப் பெரிய கூட்டணியாக இது இருப்பதால் கனிசமான தொகுதிகளை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. பன்னீர்செல்வம், பழனிசாமி, ஸ்டாலின் தலைமையில் தற்போது தேர்தல் நடக்க இருப்பதால் எளிதாக கணிக்க முடியாத நிலையே உள்ளது. இதனால் இரண்டு கூட்டணியும் கடுமையாக உழைக்க வேண்டிய நிலை உள்ளது. 

இது போன்ற சூழ்நிலையில் பாமக கடந்த தேர்தலைப் போல இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். அனைவரின் வெற்றி என்பதுதான் கூட்டணியின் இலக்கு. அதை உணர்ந்து பாமக செயல்பட வேண்டும். உங்கள் உழைப்புக்கு பரிசாகத்தான் அமைச்சர் பதவி கிடைக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் அன்புமணியைப் போல வெறும் எம்பியாக இருக்கலாம். அமைச்சர் பதவி அம்போதான். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP