1. Home
  2. தமிழ்நாடு

தை முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேக அலங்காரம்..!

1

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள, கோட்டை பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள் பாலித்து வருகிறார். தினசரி கட்டளைதாரர்கள் மூலம், காலையில் ஆஞ்சநேயருக்கு 1,008 வடை மாலை அலங்காரம் மற்றும் சிறப்பு அபிசேகம் நடைபெறும்.

ஒவ்வொரு தமிழ் மாதமும், முதல் ஞாயிற்றுக்கிழமை பக்தர்களின் சார்பில் பொது அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும். இன்று தை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, காலை 9 மணிக்கு 1,008 வடைமாலை சார்த்தப்பட்டு தீபாராதணை நடைபெற்றது.

பின்னர், நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் சந்தனம், உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கனகாபிசேகத்துடன் அபிசேகம் நிறைவு பெற்றது. தொடர்ந்து சுவாமிக்குசிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தைப்பொங்கல் பண்டிகை, தொடர் விடுமுறையால் வழக்கத்தை விட இன்று ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட தூரம் கியூவில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Trending News

Latest News

You May Like