சென்னையில் இருந்து மதுரைக்கு இவ்வளவா? பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்..!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமறை கிடைத்துள்ளது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னையில் உள்ள மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வாடிக்கை. சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு வசதியாக தமிழக அரசு, ஏராளமான சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
இதேபோல் தெற்கு ரயில்வே மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய ரயில்வேயும் ஏராளமான சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் தென் மாவட்டங்கள் மற்றும் மற்ற மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மக்கள் விமானங்களில் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.
நேர சேமிப்பை கணக்கில் கொண்டு மக்கள் விமானங்களில் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறையைத் தொடர்ந்து, தென்மாவட்டங்களுக்கான விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சாதாரண கட்டணம் ரூ.4,109, தற்போது, ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.8,976 முதல் ரூ.13,317 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண கட்டணம் ரூ.4,300 வசூலிக்கப்படுகிறது. ஆனால் தற்போது, ரூ.11,749 முதல் ரூ.17,745 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சராசரியாக அனைத்து விமான நிறுவனங்களின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.