மீண்டும் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை..!
ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி- பெஹ்ரோர் மாவட்டத்தில் 700 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு விவசாய நிலத்தில் இருக்கிறது. இதன் அருகே, நேற்று (டிச.,23) சென்ட்டா என்ற 3 வயது பெண் குழந்தை விளையாடி கொண்டு இருந்துள்ளார். அப்போது சிறிது நேரத்தில் குழந்தையை காணவில்லை என தந்தை பதறி போனார். குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரே குழந்தையை மீட்க சிறிது நேரம் போராடி பார்த்தார். ஆனால் முடியவில்லை. குழந்தையின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் எல்லா முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, மீட்பு படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தேசிய மீட்புப் படை அதிகாரிகள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என பெற்றோர், உறவினர்கள் ஆழ்துளை கிணறு அருகே காத்திருக்கின்றனர். கடந்த டிசம்பர் 11ம் தேதி, தவுசா மாவட்டத்தில் 150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் 3 நாட்கள், நீண்ட மீட்பு நடவடிக்கைக்கு பிறகு மீட்கப்பட்டான். ஆனால் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. அந்த 5 வயது சிறுவன் உயிரிழந்துவிட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.