1. Home
  2. தமிழ்நாடு

சீமான் என்னிடம் பொதுவெளியில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்..!

1

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் சமூக வலை தளங்களிலும், பொது வெளியிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி எஸ் பி வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 ல் அவரின் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் மூலம் வழக்கு தொடரத்துள்ளார்.


அந்த வழக்கிற்காக நீதிபதி உத்தரவின் அடிப்படையில் எஸ் பி வருண்குமார் இன்று குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி (பொறுப்பு) பாலாஜி முன்பு நேரில் ஆஜராகினார். அவரிடம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தன்னுடைய கடமையை செய்ததற்காக தன்னை குறித்தும் தன் குடும்பத்தினர் குறித்தும் அவதூறாகவும், ஆபாசமாகவும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர். மேலும் பொதுவெளியிலும் எங்கள் குறித்து பேசினார்.


குறிப்பாக ஜாதி உள்ளிட்டவை குறித்து பகிரங்கமாக பொதுவெளியில் சீமான் பேசினார். மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவர் பேசியுள்ளார் என்பது குறித்து விரிவான வாக்குமூலத்தை அளித்தார். அதனை நீதிபதி பாலாஜி முழுமையாக பதிவு செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை வரும் ஜனவரி மாதம் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


நீதிமன்ற நடைமுறைகள் முடிவடைந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி எஸ் பி வருண்குமார்..... இந்த வழக்கை என்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி நான் தொடரவில்லை. மாறாக தனிப்பட்ட முறையில் தான் வழக்கு தொடர்ந்து உள்ளேன். இது குறித்து என்னுடைய உயர் அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக நான் தெரிவித்துவிட்டேன்.


கடந்த 2021 ஆம் ஆண்டு நான் திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய பொழுது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் என்பவர் அவதூறான சில விஷயங்களை பதிவு செய்தார். அதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. எனவே அவரை கைது செய்தோம். அப்பொழுது இருந்தே அந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்னை விமர்சனம் செய்தார்கள். அதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு வழக்கிற்காக அவரை கைது செய்த பொழுது நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என்னை அவதூறாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்தார்கள்.


என்னுடைய குடும்பத்தை குறித்தும் அவதூறான கருத்தை பரப்பினார்கள். என்னுடைய மனைவியும் புதுக்கோட்டை எஸ்.பியுமான வந்திதா பாண்டே மற்றும் என் குழந்தைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் மார்ஃபிங்க் செய்து சில புகைப்படங்களை பகிர்ந்தார்கள் அந்த புகைப்படங்கள் இன்னமும் சமூக வலைத்தளங்களில் நீக்கப்படாமல் உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய சீமான் என்னை அவதூறாக பல இடங்களில் பேசினார் குறிப்பாக ஜாதியை குறிப்பிட்டும் பேசினார்.


நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் என் குடும்பத்தை அவதூறாகவும், ஆபாசமாகவும் சித்தரித்தார்கள் அதற்கு கூட சீமான் கண்டிக்கவில்லை. அவர்கள் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை என மட்டும் சீமான் பேசி வந்தார். ஆனால் அவ்வாறு பதிவிட்டவர்களை கைது செய்த போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தான் அவர்களை பிணையில் எடுத்தனர். சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக எழுதி உள்ளார்கள் என கூறினால் அதற்கு கண்டிக்காமல் எங்கள் குறித்தும் அவ்வாறு பலர் எழுதியுள்ளார்கள் என மட்டும் சீமான் பேசி வந்தார். அதற்கு அவர் முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அவருக்கு சுயமரியாதை இல்லை. எனக்கு சுயமரியாத இருக்கிறது எங்கள் குடும்பத்தினர் குறித்து பேசியதால் நான் வழக்கு தொடர்ந்து உள்ளேன்.


தற்போது சீமான் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளேன். அடுத்த கட்டமாக அவர் மீது சிவில் வழக்கு தொடரவிருக்கிறேன். நான் ஓய்வு பெற்றாலும் இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவேன். வீட்டில் புலி வெளியே எலி என்பார்கள். அதுபோல சீமான் மைக் முன்பு பேசினாள் புலி போல் பேசுவார் பேசியதெல்லாம் பேசிவிட்டு என்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒரு தொழிலதிபர் மூலம் முயற்சி செய்தார். ஆனால் நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தேன் அவர் அதை செய்யவில்லை.


இனிமேல் பொதுவெளியில் சீமான் மன்னிப்பு கேட்டாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவர் முறைப்படி நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரி மனு அளித்தால் அதன் பிறகு எனது நிலைப்பாடு குறித்து தெரிவிப்பேன். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவன் மிகவும் கஷ்டப்பட்டு காவல்துறை பணியில் சேர்ந்துள்ளேன். இதற்காக பல தியாகங்களை செய்துள்ளேன். நான் அணிந்திருக்கும் காக்கி உடையை கழட்டி வைத்து விட்டு ஒண்டிக் கொண்டு வா பார்ப்போம் என சீமான் சொல்கிறார். நான் ஓய்வு பெற்றாலும் அவர் மீதான வழக்கை தொடர்ந்து நடத்துவேன்.

ஏற்கனவே காக்கி சட்டையை கழட்டி வைத்துவிட்டு வா என பேசியவர் தற்பொழுது எனக்கும் வருண் குமாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என பேசுகிறார். சீமானின் பேச்சில் குழப்பமும் பொய்யும்தான் எப்பொழுதும் இருக்கிறது என தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like