இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் மீது எஸ்.சி/ எஸ்.டி வழக்குப் பதிவு!

போவி என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் துர்கப்பா. கர்நாடகாவைச் சேர்ந்த இவர் இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) நிலையான தொழில்நுட்ப மையத்தில் ஆசிரியராக இருந்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு, இவர் மீது போலியான பாலியல் வழக்கில் சிக்கவைக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதோடு, சாதிய ரீதியிலான அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த 71ஆவது நகர சிவில் மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் (சிசிஎச்) உத்தரவின்படி சதாசிவ நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களில் கோவிந்தன் ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியர், சந்தியா விஸ்வேஸ்வரா, ஹரி கேவிஎஸ், தாசப்பா, பலராம் பி, ஹேமலதா மிஷி, சட்டோபாத்யாயா கே, பிரதீப் டி சவுகர் மற்றும் மனோகரன் ஆகியோர் அடங்குவர்.
கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இன்ஃபோசிஸின் இணை நிறுவனர்களில் ஒருவர். அவர் 2011 முதல் 2014 வரை நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், 2007 முதல் 2011 வரை இன்ஃபோசிஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார்.
இந்திய அரசாங்கம் கோபாலகிருஷ்ணனுக்கு நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் விருதை ஜனவரி 2011 இல் வழங்கியது. ஜனவரி 2014 இல் டாவோஸில் உலக பொருளாதார மன்றத்தின் இணைத் தலைவர்களில் ஒருவராக பணியாற்றினார்.
இது தொடர்பாக கிரிஸ் கோபாலகிருஷ்ணனிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.