நாளை 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! - எந்த மாவட்டம் தெரியுமா?
திருவண்ணாமலை, கடலூர், வேலூர்,ராணிப்பேட்டை, விழுப்புரம் புதுச்சேரியில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே சனிக்கிழமை கரையைக் கடந்தது. புயல் காரணமாக சூறாவளி காற்றுடன் புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் இடைவிடாது பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனால் புதுச்சேரி நகரப்பகுதி மட்டுமின்றி கிராமப் பகுதிகளும் வெள்ளக்காடானது. பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. புதுச்சேரியில் புயல் காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்துக்கு பின்பு புதுச்சேரியில் பல பகுதிகளில் மின் விநியோகம் மீண்டும் வரத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் அரசு தரப்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் மக்கள் தங்கும் முகாம்களாக பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், “தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.” என்று தெரிவித்தார்.
அதே போல் விழுப்புரம் மாவட்டத்துக்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளநீர் இன்னும் வடியாத சூழலில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களிலும் நாளை (திங்கள்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.