1. Home
  2. தமிழ்நாடு

"கோவில் அடிமை நிறுத்து" எனும் இயக்கத்தை துவங்கினார் சத்குரு !!

"கோவில் அடிமை நிறுத்து" எனும் இயக்கத்தை துவங்கினார் சத்குரு !!

தமிழக மக்களிடமே கோவில்களை ஒப்படைக்க உறுதிமொழி அளியுங்கள் என முதல்வர், எதிர்கட்சி தலைவருக்கு சத்குரு கடிதம்

தமிழக கோவில்களை அரசு கட்டுபாட்டிலிருந்து விடுவிக்க கோரி சத்குரு "கோவில் அடிமை நிறுத்து" எனும் இயக்கத்தை துவங்கினார். இதற்கு சமூகத்தின் பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஆதரவு பெருகியது.

அந்த வகையில் 3 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் ஏகோபித்த ஆதரவினை மிஸ்டு கால்கள் மூலமும், சமூக வலைதளங்களின் வாயிலாகவும் இவ்வியக்கத்திற்கு அளித்துள்ளனர். இதனைக் குறிப்பிட்டு சத்குரு அவர்கள் தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், எதிர்க்கட்சி தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் கடிதம் ஏழுதி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “3 கோடிக்கும் மேற்பட்ட தமிழரின் நெஞ்சார்ந்த விருப்பத்தை இதன்மூலம் தெரிவிக்கிறேன். தமிழகத்தின் ஆன்மாவை முழு பொலிவிற்கு மீட்டெடுத்தவராய் நீங்கள் என்றென்றும் நினைவுக் கூரப்பட, பொறுப்புள்ள அரசியல் தலைவர்களாய் திராவிட பெருமையின் மையமான #கோவில்களை விடுவிக்குமாறு மன்றாடி கேட்கிறேன்.” என்று குறிபிட்டுள்ளார்


அக்கடிதத்தில் சத்குரு கூறியிருப்பதாவது.

மக்களின் ஒருங்கிணைந்த குரல் ஒலித்திருக்கிறது. இந்து சமுதாயத்தினர், தனது புனிதமான வழிபாட்டுத் தலத்தை தானே பேணிப் பராமரித்து நிர்வகிக்க, அவர்களுக்கு உண்டான ஜனநாயக உரிமையை அரசு வழங்கவேண்டும் என்று ஒருங்கிணைந்த விதத்தில் குரல் எழுப்பியிருக்கிறார்கள். தமிழக கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பது குறித்தும், அரசின் கட்டுப்பாட்டில் கோவில்கள் அடைந்துள்ள அவலநிலை குறித்தும் கடந்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

ஒரு பிரம்மாண்ட இயக்கம் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் ஒரே குரலில், விலைமதிப்பில்லாத கோவில்களின் அவலநிலை குறித்த தங்களது ஆழமான வேதனையும் ஆற்றாமையையும் பதிவு செய்துள்ளனர். ஆன்மீகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் மையப்புள்ளியாய் விளங்கும் கோவில்கள் விடுவிக்கப்பட்டு, பக்தர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டு, கோவில்களை உயிரோட்டமாக்கி அதன் முழு ஆற்றலுக்கு மீண்டும் இயங்கச் செய்யவேண்டும் என்பதே அவர்களின் தீவிர விருப்பமாய் இருக்கிறது.

இந்த தகவலை தங்களுக்கு நான் தெரியப்படுத்தும் இவ்வேளையில், மிஸ்டுகால்களும், களத்தில் மக்கள் ஓரிடத்தில் கூடி தெரிவித்த ஆதரவும், சமூக வலைத்தளப் பக்கங்களிலும், இணையதளத்தில் மக்கள் தெரிவித்த ஆதரவுகள் மட்டுமே கணக்கெடுக்கக்கூடிய வகையில் இருப்பதால், அவற்றை மட்டுமே தங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். தமிழ் மக்கள் இதயத்தில் உள்ள வலியை கணக்கெடுக்க முடியாது, அவர்களது வேதனையை புறக்கணிக்கக்கூடிய காலகட்டமும் கடந்தோடி விட்டது. இம்மாநில மக்கள் மட்டுமல்ல, இந்த சீர்திருத்தத்திற்காக காத்திருக்கும் நம் சமூகத்தை சேர்ந்த ஆன்மீகத் தலைவர்களும், இன்ன பிறரும் துடிப்பாக ஆதரவு திரட்டி, இந்த ஒரு நோக்கத்திற்காக உறுதியுடன் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நம் ஜனநாயகத்தில், அரசியல் எனும் வலிமையான பாதையில் செல்ல முடிவுசெய்து, மக்களின் பிரதிநிதியாய் செயலாற்றி சேவை வாழ்வில் ஈடுபட்டுள்ள தாங்கள், மக்கள் விடுத்திருக்கும் இக்கோரிக்கையை புறக்கணிக்கவோ, கோரிக்கைக்கு செவிமடுக்காமலோ இருக்க இயலாது என்பது என் எண்ணம். அதனால், தங்களது தலைமையின் கீழ், தமிழ் மக்களிடமே தமிழக கோவில்களை ஒப்படைக்க வேண்டிய உறுதிமொழியினை இச்சூழ்நிலையில் மிக அவசரமாக தாங்கள் வழங்கிட வேண்டுமென்றும், அதன்மூலம் திராவிடத்தின் பெருமைக்குரியவராய், வரலாற்றில் பொறிக்கப்படும் பெருமையையும் பெற்றவராய் தாங்கள் நினைவு கொள்ளப்படுவீர்கள் என்பதும் நிச்சயம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like