சலூன் கடைகள் திறப்பு? - வெளியாகிறது முக்கிய அறிவிப்பு

 | 

தமிழ்நாட்டில் கொரோனா 2ஆவது அலை காரணமாக கடந்த மாதம் 10ஆந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் ஊரடங்கு ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இடையில் தளர்வுகளற்ற ஊரடங்கும் அமலில் இருந்தது.

இந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 14ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற உயர் அதிகாரிகள், தமிழ்நாட்டில் கொரோனா குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகள் அளித்து ஜூன் 21ஆம் தேதி வரை நீட்டிக்கலாம் என பரிந்துரைத்துள்ளனர்.

மேலும், உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் ஒருவரை மட்டும் அனுமதித்து சலூன் கடைகளை திறக்க வேண்டும் என தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் மத்திய சங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், 40 நாட்களாக கடைகளை திறக்க முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். இதனால் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக 15 ஆயிரம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கொரோனா குறைவாக உள்ள மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை டோக்கன் முறையில் திறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முக்கிய அறிவிப்புகளை இன்று மாலை முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP