விரைவில் பழநி மலைக்கும் இடும்பன் மலைக்கும் இடையே ரோப் கார்..!
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்ல மின் இழுவை ரயில் (வின்ச்), கம்பி வட ஊர்தி (ரோப் கார்) வசதி உள்ளது. இதில் ரோப் கார் சேவை கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. பழநி மலையின் இயற்கை எழிலை ரசித்தபடி செல்ல விரும்பும் பக்தர்கள் ரோப் காரைப் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது செயல்பாட்டில் உள்ள ரோப் காரில் ஒரே நேரத்தில் மொத்தம் 8 பெட்டிகள் இயக்கப்படுகின்றன. ஒரு பெட்டியில் 3 பேர் வீதம் அமர்ந்து செல்ல முடியும். பழநி மலையைப் போல், பழநி சிவகிரிபட்டியில் கொடைக்கானல் சாலையில் இடும்பன் மலை உள்ளது. மலை அடிவாரத்திலிருந்து இடும்பன் கோயிலுக்கு மொத்தம் 540 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
அதனால் பக்தர்கள் சிரமப்பட்டனர். மேலும் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழாக்காலங்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். எனவே, பழநி மலைக்கு வரும் பக்தர்கள், இடும்பன் மலைக்குச் சென்று வர வசதியாகப் பழநி மலைக்கும், இடும்பன் மலைக்கும் இடையே ரோப் கார் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் சேகர்பாபு ரூ.32 கோடியில் பழநி மலைக்கும், இடும்பன் மலைக்கும் இடையே ரோப் கார் அமைக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து, சில மாதங்களாகப் புதிய ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள்குறித்து நடந்த ஆய்வில் சாத்தியக்கூறுகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, புதிய ரோப் கார் அமைக்கத் திட்டம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இது தவிர, இடும்பன் மலையிலிருந்து பக்தர்கள் அடிவார பகுதிக்குச் செல்ல வசதியாக, தேவஸ்தானம் சுற்றுலா பேருந்து நிலையம் அருகே கையகப்படுத்தப்பட உள்ள 58 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியில் இடும்பன் மலையிலிருந்து பக்தர்கள் கீழே இறங்கவும் ரோப் கார் வசதி ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.