தொடரும் கொடூரக் கொலைகள் - அச்சத்தில் நெல்லை பொதுமக்கள்..!

 | 

நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியில் உள்ள குளத்தின் அருகில் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக இன்று அதிகாலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து விரைந்து சென்ற போலீஸார் அங்கு கிடந்த உடலைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

கொலையானவரின் கை, கால் துண்டிக்கப்பட்டதுடன், அவரது தலையையும் கொலையாளிகள் அறுத்து எடுத்து சற்று தூரத்தில் உள்ள குளத்தின் அருகில் வீசிச் சென்றுள்ளனர்.

கொலையானவரின் உடலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்த போலீஸார் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு டிஐஜி பிரவீன்குமார் அபினவ், எஸ்பி மணிவண்ணன் ஆகியோர் வந்து பார்வையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.

போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கொலையானவர் கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பதும், விவசாய பணிகளுக்கு இயந்திரம் அனுப்பும் புரோக்கர் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

வழக்கம் போல, விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக அதிகாலையில் வீட்டில் இருந்து பைக்கில் வெளியே சென்ற அவர் கோபாலசமுத்திரம் குளத்தின் கரையில் சென்றபோது வழிமறித்த மர்ம கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியுள்ளது. முதலில் கையில் வெட்டியதும் கை துண்டானதால் தடுமாறியுள்ளார்.

பைக்கை ஓட்ட முடியாமல் கீழே விழுந்த அவர் எழுந்து ஓட முயன்றபோது காலில் வெட்டியுள்ளனர். அதன் பின்னர் கொடூரமாக அவரை வெட்டிக் கொன்ற அந்த கும்பல் அவரது கழுத்தை அறுத்து தலையைத் துண்டாக்கியதுடன் அதை எடுத்துச் சென்று குளத்தின் கரையில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

நேற்று, கோபாலசமுத்திரம் அருகே சங்கர சுப்பிரமணியன் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த கொலைக்குப் பழிதீர்க்கும் வகையில் அவரை வெட்டிய கும்பல் தலையைத் துண்டித்தது.

சங்கர சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில் இன்று மாரியப்பனை வெட்டிக் கொன்றுள்ளனர் என்கிறார்கள். ஆனால், கொலையான மாரியப்பன் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர அவருக்கு எந்த குற்றச் செயல்களிலும் தொடர்பு கிடையாது என்று போலீஸார் தெரிவித்தனர்.

கோபாலசமுத்திரம் கிராமத்தினர் கூறுகையில், "கொலை செய்யப்பட்ட மாரியப்பன் அப்பாவி. அவர் எந்த குற்றச் சம்பவத்திலும் ஈடுபட்டவர் இல்லை. 35 வயது நிரம்பிய அவருக்கு நான்கு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்” என்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் சாதிப் பிரச்னை ஏற்படுவதை தடுக்கும் வகையில் அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் அங்கு பதற்றம் நீடிக்கிறது.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP