1. Home
  2. தமிழ்நாடு

செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி!

Q

குடியரசு தினத்தை முன்னிட்டு, டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றினார். ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியங்களை விளக்கும் வகையில் அம்மாநிலங்களின் நடனங்கள், இசை ஆகியவை அரங்கேற்றப்பட்டது. இசைக்கருவிகள் முழங்கிய படி 300 கலைஞர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

டிஜிட்டல் பார்வையாளர் புத்தகத்தில் குறிப்புகளை பிரதமர் மோடி பதிவு செய்தார். முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இந்தோனேசியாவை சேர்ந்த 382 பேர் கொண்ட குழுவினர் அணி வகுப்பில் பங்கேற்றனர். ராணுவ வீரர்களின் அணிவகுப்பில், இந்திய ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் அதி நவீன ஆயுதங்கள், ஏவுகணைகளை ஏந்திய வாகனங்கள், பீரங்கிகள் இடம் பெற்றிருந்தன. பல்வேறு மாநிலங்களின் அலங்கார வாகனங்களும் ஊர்வலத்தில் பங்கேற்றன.

முன்னதாக விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியன்டோவை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். முப்படை வீரர்களுடன் தேசிய மாணவர் படையினரும், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

முன்னதாக தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.

பிரம்மோஸ் ஏவுகணை, பினாகா ராக்கெட், ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை, சஞ்சய் போர்க்கள கண்காணிப்பு அமைப்பு, பிரளய் ஏவுகணை, டி90 பீஷ்மா டாங்குகள், படைவீரர்களை கொண்டு செல்லும் சரத் வாகனங்கள், நாக் ஏவுகணைகள், ஐராவத் தாக்குதல் வாகனம் ஆகியவை இந்த அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தன. இதில் பிரளய் ஏவுகணை மற்றும் சஞ்சய் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்பது இதுவே முதல் முறை.

குடியரசு தினம் முன்னிட்டு பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள். நமது அரசியலமைப்பு வளர்ச்சிப் பயணம் ஜனநாயகம், கண்ணியம் மற்றும் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டது. நமது அரசியலமைப்பின் சித்தாந்தங்களை பாதுகாப்பதற்கான நமது முயற்சிகளை இத்தருணம் பலப்படுத்துவதாக அமையட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like