PONGAL RECIPE : குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வள்ளிக்கிழங்கு பொரியல்..!

பொங்கலன்று மட்டும்தான் என்றில்லாமல் எப்போதும் விருப்பமான ரெஸிபி இது. பொறியலாகவும், ஆவியில் வேகவைத்தும், மொர மொரப்பான தோசையாகவும் என பல அவதாரங்களை சுவைக்குறையாமல் கொடுப்பது வள்ளிக்கிழங்கு என்றே சொல்லலாம். சத்தான ஏழைகளின் உணவு இது என்றும் சொல்லலாம். நீளமாக உருண்டையாக ஒழுங்கற்ற வடிவமாக என இதுதான் என்று வரையறுக்கப்படாத வடிவில் இவை காணப்படும். இந்தக் கிழங்கின் மேல் தோல் வெள்ளை, சிவப்பு, பழுப்பு,ஆரஞ்சு போன்ற நிறங்களில் காணப்படும். உட்புறம் சதையும் இதற்கேற்ற வகையில் இருக்கும்.
பெரும்பாலான நோய்களைத் தீர்க்கும் அருமருந்து இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பொதிந்துள்ளது. படையலுக்கு பயன்படுத்தும் போது கிழங்கின் பாகம் வெடித்தோ சுருங்கியோ இல்லாமல் இருக்க வேண்டும். முளைக்கட்டிய கிழங்கையும் தவிர்க்க வேண்டும். சமைக்கும் போது மட்டுமே நீரில் அலசி தோலை நீக்கி பயன்படுத்த வேண்டும். குளிர்சாதன பெட்டியில் வைப்பதையும் தவிர்ப்பது நல்லது. விதவிதமாக சமைக்கலாம் என்றாலும் பொங்கலன்று பொரியலாக மட்டுமே செய்வது வழக்கம்.
வள்ளிக்கிழங்கு பொரியல்..
தேவை:
சீரான வள்ளிக்கிழங்கு - 4
சாம்பார் வெங்காயம் - அரை கப்
வரமிளகாய்- காரத்துக்கேற்ப
தாளிக்க:
கடுகு, சீரகம், உ.பருப்பு - தலா 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு..
செய்முறை:
வள்ளிக்கிழங்கைத் தோல்சீவி வட்டமாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருள்கள் சேர்த்து வரமிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து, நறுக்கிய வள்ளிக்கிழங்கை போட்டு நன்றாக வதக்கவும். கிழங்கு மென்மையாக இருக்கும் என்பதால் குறைந்த அளவு தண்ணீரே போதுமானது. இயல்பிலேயே இனிப்புச் சுவை கொண்ட கிழங்கில் வரமிளகாய் காரமே போதுமானது.
சிப்ஸ் ஆகவும் செய்யலாம். தோசையாகவும் வார்க்கலாம் என்றாலும் இன்றைய தினம் பொரியலாக செய்வதே நல்லது.
newstm.in