எதிர் கட்சி தலைவருக்கு இது அழகா  மிஸ்டர் ஸ்டாலின்?

ஒரு எதிர்கட்சித் தலைவர் இப்படி பேசுவது எந்தவகையில் அழகு என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம். உண்மையான எதிர்கட்சித் தலைவராக இருந்தால் முதல்வர் பழனிசாமி எந்த எந்த நிறுவனங்களை அழைத்து வர முயற்சிக்கிறார் என்று பார்த்து, அது நம் மாநிலத்திற்கு நன்மை பயக்குமா, அல்லது தீமை பயக்குமா என்று விமர்சனம் செய்திருக்க வேண்டும்.
 | 

எதிர் கட்சி தலைவருக்கு இது அழகா  மிஸ்டர் ஸ்டாலின்?

மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொழில்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த துறையை பரப்ப, பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு கட்டாயம் உள்ளது. சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளில் நாட்டில் உள்ள பணக்கார்களை சந்தித்து, தொழில் தொடங்க முதல்வர்கள், அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். 

அது வரையில் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு வாழ்ந்த பணக்கார்கள், ஜமீன்தார்கள் தொழிற்சாலைகள் தொடங்க முன் வந்தார்கள். கோவை, திருப்பூர், சிவகாசி போன்ற ஊர்களின் வரலாற்றை படித்தால், ஒரு சில குடும்பங்கள் தொடங்கிய தொழில், இன்று பல கோடி அன்னிய செலாவணியை ஈட்டித் தருவது தெரியும்.  

உள்ளூரில் இருப்பவர்கள் சுற்றி சுற்றி யோசித்தாலும், ஒரு சில தொழில்களை மட்டுமே தொடங்குவார்கள். இந்த சூழ்நிலையில் தான், வெளிநாட்டு முதலீட்டை கவர வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

குஜராத் போன்ற மாநிலங்களில், உலக தொழிலதிபர்கள் சந்திப்பு நடத்தி தொழில் வளர்ச்சியை உருவாக்குகிறார்கள்.  இடது சாரி கொள்கை கொண்ட கேரள முதல்வர் கூட, முதலாளித்துவ நாடுகளுக்கு  சென்று தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 2015ம் ஆண்டில் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தனார். அதில் 2  லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி மதிப்பிலான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதே போல கடந்த ஜனவரி மாதம் முதல்வர் பழனிசாமி 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். அதில் சில பல லட்சம் கோடிகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.

அடுத்த முயற்சியாக முதல்வர் பழனிசாமி  14 நாள் அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் போன்ற நாடுகளுக்கு  சுற்றுப்பயணம் சென்றார்.

தற்போதும் கூட சுமார் 8 ஆயிரம் கோடிக்கு தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இவை அனைத்தும் நடக்கலாம், ஆனால் நடக்காமல் போகலாம், காரணம் தொழில் தொடங்க  யாரோ ஒருவர் முதல் போட வேண்டும். அவருக்கு அனைத்து சூழ்நிலையையும் சரியாக அமைந்தால் தான் இங்கு தொழில் தொடங்குவார்.  ஸ்டெர்லைட் ஆலையில் நாம் நடத்திய போராட்டங்கள், மீத்தேன் வாயு எடுப்பதற்கு நாம் காட்டும் எதிர்ப்பு போன்ற நிலைப்பாடுகள் தொழில் அதிபர்கள் சிந்தையில் வந்து போகும்.

அதனால் முதல்வர் கூறும் அளவிற்கு இந்த பயணம் வெற்றியா தோல்வியா என்பது தெரியவே இன்னும் பல காலம் ஆகும்.

ஆனால் எல்லாவற்றிலும் அரசியல் செய்வது போலவே முதல்வரின் சுற்றுப்பயணத்தையும் அரசியலாக்குகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.  தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று பார்த்தால் ஸ்டாலின் தற்போது செய்வது எவ்வளவு மலிவு அரசியல் என்று தெரியும்.

முதல்வர் வெளிநாடு போய் முதலீடு திரட்டுவது நாட்டுக்கா, அல்லது தனக்கா என்று குதர்க்கம் கொப்பளிக்க கேள்வி எழுப்புகிறார்  ஸ்டாலின். ஒரு எதிர்கட்சித்  தலைவர் இப்படி பேசுவது எந்தவகையில் அழகு என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.  உண்மையான எதிர்கட்சித் தலைவராக இருந்தால் முதல்வர் பழனிசாமி  எந்த எந்த நிறுவனங்களை அழைத்து வர முயற்சிக்கிறார் என்று பார்த்து, அது நம் மாநிலத்திற்கு நன்மை பயக்குமா, அல்லது தீமை பயக்குமா என்று விமர்சனம் செய்திருக்க வேண்டும்.

வெளிநாட்டு முதலீடுக்காக சிவப்பு கம்பளம் விரிக்கும் அதே தொழில் மாநிலத்தில் எப்படி முடங்கி கிடக்கிறது. 20 சதவீத கமிஷனுக்கு பயந்து தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சென்ற நிறுவனங்கள் எவை எவை என்று பட்டியல் வாசித்து மக்களுக்கும், அரசுக்கும் தெளிவுபடுத்தி இருப்பார்,

அதை விடுத்து வெறும் வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபடுவதும், வெற்று அரசியல் வார்த்தைகளும் வடை எண்ணுவதற்கு பதிலாக துளை எண்ணுவதற்கு சமம் என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP