சாதி மதத்தினரின்றி கட்சி நடத்த பாட்ஷாவா..? ரஜினியின் ’பாபா’ விதிகள்!

‘’சாதி, மத சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ, அமைப்புகளிலோ உறுப்பினர்களாக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினராகச் சேர அனுமதி இல்லை’’ என அறிவித்து இருக்கிறார். அப்படி அவரால் கட்சியை நடத்திவிட முடியுமா?
 | 

சாதி மதத்தினரின்றி கட்சி நடத்த பாட்ஷாவா..? ரஜினியின் ’பாபா’ விதிகள்!

செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள தயங்காதவர் ரஜினிகாந்த். எந்தக் கேள்விக்கும் ‘’பட்..படார்’’ பதில்களை சொல்லிவிட்டு கடந்து சென்றுவிடுவார். 

மறுநாள் காலையில் அவரது பேட்டிதான் அச்சு ஊடகங்களுக்கு எட்டுகாலம். மாலையில் காட்சி ஊடகங்களுக்கு விவாதமேடை. 
இப்போதும் சூப்பர் ஸ்டாரின் அதிரடி அறிவிப்பு ஒன்று விவாதமேடைகளில் அனல் பறக்க அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ரஜினி  மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை நெறிப்படுத்தும் வகையில் வகுக்கப்பட்டுள்ள விதிகளில் உள்ள ஒரு சரத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ‘’சாதி, மத சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ, அமைப்புகளிலோ உறுப்பினர்களாக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினராகச் சேர அனுமதி இல்லை’’ என்பதே அந்தச் சரத்து..! 

சாதி மதத்தினரின்றி கட்சி நடத்த பாட்ஷாவா..? ரஜினியின் ’பாபா’ விதிகள்!

இப்போதுள்ள சில கட்சிகளின் நாற்றங்காலாகச் சாதி சங்கங்களும், மத அமைப்புகளும் இருந்துள்ளன. கட்சி என்கிற புதிய வர்ணம் அந்த அமைப்புகளுக்குப் பூசப்பட்டிருந்தாலும் அதன் வேர்கள் சாதியும், மதமும் தான். சில கட்சிகள் பகிரங்கமாகவே சாதி மற்றும் மதத்தை அடையாளப்படுத்தியே செயல்படுகின்றன.  அதன் தலைவர்கள் சிலர் ரஜினியோடு நெருங்கிய தொடர்பிலும் இருந்து வருகின்றனர். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ரஜினியின் தீவிர விசுவாசி. 

மத அமைப்புகளில் உள்ளோர் தனது மன்றத்தில் சேர தடா போட்டுள்ள ரஜினி, நாளைய தேர்தலில் இதே அர்ஜுன் சம்பத் ரஜினிக்கு ஆதரவு அளிக்க முன் வந்தால் அதனை எப்படி எடுத்துக்கொள்வார்? முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ரஜினி மீது பற்று கொண்டவர். கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசுவும் ரஜினி மீது நேசம் காட்டுபவர். ரஜினியுடன் இவர்கள் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டுவதும் நிஜம். இவர்களுக்கு ராகவேந்திரா மண்டப கதவுகள் திறக்குமா? இல்லை நிரந்தமாக மூடப்படுமா? 

சாதி மதத்தினரின்றி கட்சி நடத்த பாட்ஷாவா..? ரஜினியின் ’பாபா’ விதிகள்!

‘’பாஜகவுடன் ஒட்டும் இல்லை....உறவும் இல்லை’’ என ரஜினி அறிவித்துத் தேர்தல் களத்தில் இறங்கினால், தமிழகத்தில் செயல்படும் சில முஸ்லிம் அமைப்புகளும் அவருடன் இணைவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அவர்களுக்கு ரஜினி பதில் என்னவாக இருக்கும் ? இவை எல்லாம் போகட்டும்... ரஜினியின் அறிவிப்பில் உள்ள முக்கிய சிக்கலை அவர் அறிவாரா? சாதி, மத அமைப்புகளில் உள்ள ரஜினி ரசிகர்கள் அவற்றின் மூலம் தங்கள் குழந்தைகள் படிப்பு செலவுக்கு நிதி பெறுகிறார்கள். திருமண உதவி கிடைக்கிறது. இந்த அமைப்புகளால் நடத்தப்படும் மண்டபங்களில் ரஜினி ரசிகர்களின் குடும்பத் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு இலவசமாக இடம் அளிக்கப்படுகிறது. 

சாதி மதத்தினரின்றி கட்சி நடத்த பாட்ஷாவா..? ரஜினியின் ’பாபா’ விதிகள்!

இந்த அமைப்புகள் மூலம் இப்படியான பல்வேறு சவுகரியங்களைப் பெறும் ரஜினி ரசிகர்கள் அந்த அமைப்பைத் துறந்து விட்டு வந்தால் மட்டுமே மன்றத்தில் இடம் உண்டு என்று ரஜினி சொல்வதை ஏற்றுக்கொள்வார்களா..? தமிழகத்தில் இன்றைய தினம் காமராஜர், முத்துராமலிங்கதேவர், வ.உ.சி உள்ளிட்ட தலைவர்கள் பெயரில் ஆயிரக்கணக்கான பேரவைகள் செயல்பாட்டில் உள்ளன. சமூக சேவையாற்றி வருகின்றன. இந்த அமைப்புகளின் பின்னணியில் சாதிகள் இருப்பது உண்மை. இவற்றிலும் ரஜினி ரசிகர்கள் இருக்கிறார்கள். இவற்றின் உறுப்பினர்களும் ரஜினி மன்றத்தில் சேர முடியாது தானே..? 

வினாக்களை வைத்து விட்டோம்... இதற்கு, கேள்வியின் நாயகனான ரஜினிதான் பதில் சொல்ல வேண்டும்! 

-பா.பாரதி

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP