செல்லப்பிராணி வளர்ப்போரே உஷார்… பரவுது பார்வோ வைரஸ்..!

 | 

மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், ‘பார்வோ வைரஸ்’ பரவலால் வீட்டு செல்லப்பிராணிகளான நாய்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

காற்றின் மூலம் வேகமாக பரவும் கெனைன் பார்வோ வைரஸ், விலங்குகளை மட்டுமே, அதிலும் குறிப்பாக நாய்களை மட்டுமே அதிகம் தாக்குகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு சோர்வு, வாந்தி, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படும். உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு கூட ஏற்படும்.

பாதிக்கப்பட்ட நாயின் எச்சம், சிறுநீர், மலத்தில் இருந்து பரவும் வைரஸ், பிற நாய்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தடுப்பூசி செலுத்தினால், இந்த நோய் பாதிப்பில் இருந்து பிராணிகளை காப்பாற்றலாம். பொதுவாக நாய்களுக்கு, மூன்று தவணை பார்வோ வைரஸ் தடுப்பூசிகளும், இரண்டு தவணை ரேபிஸ் தடுப்பூசிகளும் செலுத்த வேண்டும்.

1

இதுகுறித்து, கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கூறியதாவது;  “பார்வோ வைரஸ் பெரும்பாலும் மழைக் காலங்களில் வேகமாக பரவக்கூடியவை. ஜூன், ஜூலை, நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

அந்த காலகட்டத்தில், சென்னையில் மட்டும் தினமும் 130 முதல் 150 நாய்கள் வரை பார்வோ வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அழைத்து வரப்படுகிறது. தற்போது அந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. முறையாக தடுப்பூசிகள் செலுத்தத் தவறியதே இதற்கு முக்கிய காரணம்.

ரேபிஸ் தடுப்பூசி 50 ரூபாய்க்கு குறைவாகவும், பார்வோ வைரஸ் தடுப்பூசி 300 ரூபாய்க்கு மேலும் விற்கப்படுகிறது. கொரோனா பொதுமுடக்கத்தால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பலர், தங்கள் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போட தவறிவிட்டனர். இதன் விளைவாக, நாய்களுக்கு பார்வோ வைரஸ் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.

1

பெருந்தொற்று காலத்தில் பல இன்னல்களை எதிர்கொண்டாலும், நம்மை நம்பியிருக்கும் உயிர்களையும் காக்க வேண்டும். எனவே, செல்லப் பிராணிகளுக்கு முறையான தடுப்பூசி செலுத்த வேண்டும். நோய் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக, கால்நடை மருத்துவரிடம் காண்பித்து, சிகிச்சை அளிக்க வேண்டும்” என அவர்கள் கூறினர்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP