விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது நம்பிக்கை வரும் போது மக்கள் ஆட்சி அதிகாரத்தை கொடுப்பார்கள் - திருமாவளவன் பேட்டி..!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் பழனிக்கு வந்தார். அவர் நேற்று (நவ.21) காலை வின்ச் ரயில் மூலம் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர், படிப்பாதை வழியாக மலை அடிவாரத்துக்கு வந்த அவர் புலிப்பாணி ஆசிரமத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பழனி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட மெட்ரிக் பள்ளியில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதே போல், தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும், கோயில் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
நீதிமன்ற உத்தரவால் பழனி அடிவார சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தொழில் செய்திட அரசு உரிய வழிகாட்டுதல்களை ஏற்படுத்த வேண்டும். ஆட்சி அதிகாரம் மக்கள் கொடுக்கும் தீர்ப்பு. விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது நம்பிக்கை வரும் போது மக்கள் ஆட்சி அதிகாரத்தை கொடுப்பார்கள் என்று கூறினார்.