1. Home
  2. தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை முன்னிட்டு உதகை மலை ரயில் 2 நாட்கள் இயக்கம்..!

1

நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1899ம் ஆண்டு இந்த மலை ரயில் சேவை துவங்கப்பட்டது. கடந்த 2005 ம் ஆண்டு யுனேஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக மலை ரயில் அறிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலமாகவும், குன்னூர் முதல் உதகை வரை டீசலிலும் இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் இந்த மலை ரயிலில் இருந்து மலைகள், அடர்ந்த வனப் பகுதிகள், அருவிகள் என இயற்கைக் காட்சிகளைக் கண்டவாறே பயணம் மேற்கொள்ளும் மிகச்சிறந்த அனுபவம் கிடைக்கும்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், உதகை வரை நீலகிரி மலை ரயில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பகல் 12.30 மணிக்கு உதகையைச் சென்றடையும். இந்த மலை ரயிலில் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்த பயணிகளும் அதிக அளவில் பயணித்து வருகின்றனர்.


இந்த மலை ரயிலில் பயணிக்க வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதால் கோடை சீசனில் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன. 2025 புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.

பொதுவாக பொங்கல் பண்டிகை என்றாலே 3 முதல் 4 நாட்களுக்கு விடுமுறை கிடைக்கும் என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரம்பரிய பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வது வழக்கம். போகி, சூரிய பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று விழாக்கோலம் பூண்டிருக்கும்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டை தொடர்ந்து பொங்கல் பண்டிகை விரைவில் வர உள்ளது. இதனால், ஊட்டிக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் வருவதால், ஊட்டி சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், ஜனவரி 16, 18 ஆம் தேதிகளில் மேட்டுப்பாளையம் - ஊட்டி சிறப்பு மலை ரயில் இயக்கப்படவுள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 9.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு சென்று சேரும். அதேபோல, மறுமார்க்கமாக ஜனவரி 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் காலை 11.25 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும்.

குன்னூரில் இருந்து ஊட்டிக்கு ஜனவரி 16 முதல் 19 ஆம் தேதி வரை 4 நாட்கள் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது. குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40 மணிக்கு ஊட்டி வரும். பின்னர் ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு குன்னூர் சென்று சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like