செவிலியர்கள் 2வது நாளாக போராட்டம்! கலெக்டரிடம் மனு கொடுக்க திரண்டனர்!
செவிலியர்கள் 2வது நாளாக போராட்டம்! கலெக்டரிடம் மனு கொடுக்க திரண்டனர்!

திருச்சி, உத்தமனூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு உட்பட்ட வி.துறையூர் கிராமத்தில் பணிபுரிந்து வருபவர் செவிலியர் சந்தோஷமேரி. அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் கர்ப்பிணி மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார செவிலியர்கள் தகவலின் பேரில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதற்கிடையே செவிலியர்களால் தான் தனது மனைவிக்கு கொரோனா இருப்பது ஊருக்கெல்லாம் தெரிந்து விட்டது என்று எண்ணி, கணவர் சண்முகம் செவிலியர் சந்தோஷமேரியை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு தகாத வார்த்தையால் பேசி அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து சந்தோஷமேரி சமயபுரம் போலீசில் புகார் அளித்தார். செவிலியர் சந்தோஷமேரியின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சண்முகத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று முன்தினமே கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பசுகாதார நிலையத்தில் பணியாற்றும் கிராம செவிலியர்கள் தங்களது தடுப்பூசி பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று 2வது நாளாக புறநகர் பகுதியில் உள்ள 320 கிராமப்புற செவிலியர்களும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பின்னர், திரளான செவிலியர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க திரண்டனர். கலெக்டர் அலுவலகம் வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
newstm.in