செம அறிவிப்பு..! இனி உங்கள் பகுதிகளில், மருத்துவ முகாம் தேவைப்பட்டால் இந்த நம்பருக்கு அழைக்கவும்..!
தமிழகத்தில், இன்ப்ளூயன்ஸா, டெங்கு, சிக்குன் குனியா, நுரையீரல் தொற்று, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள், வேகமாக பரவி வருகின்றன.
இன்ப்ளூயன்ஸா மற்றும் கொசுக்களால் பரவும் காய்ச்சலுடன், மருத்துவமனைக்கு வருவோர் குறித்த விபரங்களை, பொது சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
ஆனால், பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் தெரிவிப்பதில்லை. இதனால், நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போர், மருத்துவ முகாம் தேவை என்றால் தொடர்பு கொள்ளலாம் என்று, பொது சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருவோரின் விபரங்களை, எளிதில் பெற முடிகிறது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் அவற்றை பெறுவதில் சவால் நீடிக்கிறது.
இதற்கு தீர்வு காண, ihip.mohfw.gov.in/cbs என்ற இணையதளத்தில் சுய விபரங்களை சமர்பித்து, தங்கள் பகுதியில் உள்ள காய்ச்சல் தகவல்களை பொது மக்கள் தெரிவிக்கலாம் என, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது.
அதை மேலும் எளிதாக்கும் வகையில், '104' என்ற மருத்துவ சேவை எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
பொதுமக்கள் அளிக்கும் தகவல் அடிப்படையில், அங்கு பொது சுகாதாரத் துறை நோய் தடுப்பு பணிகளை முன்னெடுப்பதுடன், தேவைப்பட்டால் நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைத்து, தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.