புதிய உத்தரவு..! இனி பொய் வழக்கு போடும் போலீசார் மீது வழக்கு தொடர அரசு அனுமதி தேவையில்லை..!
நாட்டில் தனிப்பட்ட காரணங்களுக்காக தனிநபர்களுக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்து, போலியான ஆதாரங்களை தயாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அரசு அனுமதி தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒரு தனிநபருக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்யும் காவல்துறை அதிகாரி, ஒருபோதும் தனது அலுவலகப்பணி என்ற போர்வையில், அவர் மீது தொடரப்படும் வழக்கிலிருந்து விலக்கு கோர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
ஏனென்றால் ஒரு தனிநபர் மீது போலியாக வழக்குப் பதிவு செய்வதும், அது தொடர்பாக போலியான ஆதாரம் அல்லது ஆவணங்களைத் தயாரிப்பதும் ஒரு பொது துறையில் பணியாற்றும் அதிகாரியின் அலுவலகப் பணியின் ஒரு பகுதியாக இருக்கவே முடியாது என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 197 அளிக்கும் பாதுகாப்பை தங்கள் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தும் அல்லது துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகள் பயன்படுத்த அனுமதியளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
எப்போது ஒரு காவல்துறை அதிகாரி மீது பொய்யான வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுகிறதோ, அப்போதே அவர் சட்டப்பிரிவு 197ன் பயனை அடைய முடியாது என்றும், மக்கள் அல்லது தனி நபர்கள் மீது போலியான வழக்குத் தொடர்ந்து ஆதாரங்களை உருவாக்குவது அல்லது போலியான ஆவணங்களைத் தயாரிப்பது என்பது அலுவல் ரீதியான பணியாக முடியாது என்பதால், இந்த சட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒருவேளை அவ்வாறு செய்ய அனுமதித்தால், மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய காவல்துறையினர், அந்த பதவியில் இருந்துகொண்டு சட்டத்துக்கு விரோதமான, மிகத் தவறான செயல்களை செய்வதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய நபர் மீது, கொலை நடந்த அதே நாளில் மத்தியப் பிரதேசத்தில் மதுபானங்களைக் கடத்தியதாக பொய் வழக்குத் தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான வழக்கு விசாரணையில் சுப்ரீம் கோர்ட் இந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளது.