வரும் 17ம் தேதி ஹரியானா முதல்வராக பதவியேற்கும் நயாப் சிங் சைனி..!

ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் மெஜாரிட்டி பெற 46 இடங்கள் தேவை என்ற நிலையில், 48 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ., மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. கருத்துக் கணிப்புகளில் பா.ஜ.,வுக்கு 30 இடங்கள் கூட வராது என்றும், காங்கிரஸே ஆட்சியைப் பிடிக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், அதனை எல்லாம் பொய்யாக்கி பா.ஜ., வெற்றி பெற்றது. ஆட்சியமைக்கும் கனவில் இருந்த காங்கிரஸூக்கு 37 தொகுதிகளே கிடைத்தன.
இந்த நிலையில், வரும் 17ம் தேதி காலை 10 மணிக்கு புதிய அரசு பதவியேற்கிறது. இந்த விழாவில், 2வது முறையாக நயாப் சிங் சைனி முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
முதல்வராக இருந்த மனோஹர் லால் கட்டார், லோக் சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல்வர் பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் விலகினார். இதனால், நயாப் சிங் சைனி முதல்வராக நியமிக்கப்பட்டார்.