சுகாதாரத்துறை செயலாளரோடு அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும்.. ஸ்டாலின் காட்டம் !

சுகாதாரத்துறை செயலாளரோடு அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும்.. ஸ்டாலின் காட்டம் !

சுகாதாரத்துறை செயலாளரோடு அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும்.. ஸ்டாலின் காட்டம் !
X

சுகாதாரத் துறையில் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கரை விடுவித்து அத்துறையை தன்வசம் வைத்துக் கொள்ளுங்கள் என்று முதலமைச்சருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இறப்புகள் குறித்த சென்னை மாநகராட்சியின் கணக்குக்கும், சுகாதாரத்துறை கணக்குக்கும் வேறுபாடு இருப்பதைப் பல நாளிதழ்களும், வார இதழ்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

சென்னையில் மட்டும் 400-க்கும் அதிகமான கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதால்தான், சுகாதாரத்துறை இணை இயக்குநர் வடிவேலன் தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்புக்குழு நியமிக்கப்பட்டு, ஆய்வை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினைத் தொடர்ந்துதான் சுகாதாரத்துறைச் செயலாளர் மாற்றத்திற்கான அறிவிப்பும் வெளியானது என்றார்.

மேலும், ஒவ்வொரு அறிவிப்பிலும் முரண்பாடுகள் இருப்பது ஏன்? உண்மைகள் உறங்கும்போதுதானே, முரண்பாடுகளுக்குச் சிறகுகள் முளைக்கும்? ஆலோசனைகளையும் முடிவுகளையும் யார் எடுக்கிறார்கள்? சுகாதாரத்துறையின் கைகளை மீறி - அதன் அதிகார எல்லையைப் புறக்கணித்துச் செயல்படுகிறார்களா?.

சுகாதாரத்துறையில் அமைச்சர் - அதிகாரிகளிடையே குழு மனப்பான்மைப் போட்டியினால், இந்தக் குழப்பங்களா? எடப்பாடி பழனிசாமிக்கு மேலே, அவரை விஞ்சிய சூப்பர் முதல்வர்களின் கைகளில் நிர்வாகம் இருக்கிறதா? குழுக்களாக, வெவ்வேறு திசை நோக்கிச் செயல்படும் இந்த அரசியல் - அதிகாரப் போட்டிக்கும், ஊழல்களுக்கும் அப்பாவி மக்களின் உயிரை அநியாயமாக கொரோனாவுக்கு பலிகடா ஆக்குவதா எனப் பொதுமக்கள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்து குமுறிக்கொண்டிருக்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில், நிலைமை கைமீறிப் போய்க் கொண்டிருக்கிற பேரிடர் சூழலில் இனியேனும், முறையான - வெளிப்படையான தன்மையுடன் செயல்பட்டு, பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்தி, இறப்பினைக் கட்டுப்படுத்துவதுடன், எத்தனை நோயாளிகள் - எவ்வளவு பரிசோதனைகள் - எத்தனை மரணங்கள் என்பதை மறைக்காமல் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் துறை அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த இக்கட்டான கட்டத்தில், பேரிடர் தணிப்புப் பணிகளில், அடிப்படை ஒருங்கிணைப்பு இல்லாமல் போனதே குளறுபடிகளுக்கும் குழப்பங்களுக்கும் காரணம் என்று நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.

அப்படிப்பட்ட முறையான ஒருங்கிணைப்பை உறுதி செய்திட, சுகாதாரத் துறையை முதலமைச்சர் தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முன்வைக்கப்படும் கருத்தும் அலட்சியப் படுத்தப்படக்கூடியதல்ல என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in 

Next Story
Share it