மன்மோகன் சிங் மறைவு : எளிமையான குடும்பப் பின்னணி டூ பிரதமர் வரை..!
டாக்டர் மன்மோகன் சிங், பாகிஸ்தானில் அமைந்திருக்கும் காஹ் என்ற இடத்தில், ஒரு சீக்கியக் குடும்பத்தில், 1932-ம் ஆண்டு பிறந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, மன்மோகன் சிங்கின் குடும்பம், இந்தியாவில் அமிர்தசரஸுக்குக் இடம்பெயர்ந்தது. பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்ற மன்மோகன் சிங், ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் பொருளாதாரத்தில் ஆய்வுப் பட்டங்களை மேற்கொண்டார்.
பின்னர், பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும், டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் என்ற கல்வி நிறுவனத்திலும் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றினார். மன்மோகன் சிங் ஒரு பொருளாதார அறிஞர் என்ற வகையில், அவரின் அறிவையும், அனுபவங்களையும் பயன்படுத்திக்கொள்ள மத்திய ஆட்சியாளர்கள் விரும்பினர். அதையடுத்து, அரசின் பல்வேறு அமைப்புகளில் அவர் முக்கியப் பொறுப்புகளை வசித்தார்.
மத்திய வர்த்தக அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராகவும், மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும், திட்ட கமிஷனின் துணைத் தலைவராகவும், பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவராகவும் மன்மோகன் சிங் பதவிகள் வகித்திருக்கிறார். இவ்வளவு அனுபவங்களுக்குப் பிறகுதான், அவர் நேரடி அரசியலுக்கு வந்தார். இந்திய தேசத்தின் பொருளாதாரம் இக்கட்டான நிலையில் சிக்கித் தவித்த வேளையில், நாட்டின் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அதன் பிறகு, நாட்டின் பொருளாதாரத்தைப் புரட்டிப்போடும் வகையில், புதிய பொருளாதாரக் கொள்கையை அதிரடியாக அமல்படுத்திய மன்மோகன் சிங், பிற்காலத்தில் நாட்டின் பிரதமராகவும் உயர்ந்தார். கடந்த 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்துவந்த மன்மோகன் சிங், இந்த ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி அரசியலிலிருந்து ஓய்வுபெற்றார்.
இந்நிலையில் மன்மோகன் சிங் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. 92 வயதான மன்மோகன் சிங், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், இந்தியாவின் மின்னல் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்.