1. Home
  2. தமிழ்நாடு

குறையாத கொரோனா! ஊரடங்கை ஜுன் 21 வரை நீட்டித்து முதல்வர் எடியூரப்பா உத்தரவு!!

குறையாத கொரோனா! ஊரடங்கை ஜுன் 21 வரை நீட்டித்து முதல்வர் எடியூரப்பா உத்தரவு!!

இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் தனித்தனியே ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. கர்நாடகாவில் ஜூன் 21ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகா உள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, தற்போது பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. கர்நாடகாவில் தற்போது ஜூன் 14 வரை உள்ள ஊரடங்கை ஜூன் 21 வரை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜூன் 14 ஆம் தேதியோடு நிறைவடையவிருக்கும் நிலையில் 11 மாவட்டங்களில் தொற்று அதிகமாக இருப்பதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எடியூரப்பா மூத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, தொற்று குறைவாக இருக்கும் மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்படுவதாகவும் பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.அத்தியாவசியத் தேவையின்றி வெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாதிப்புக் குறைவாக இருக்கும் மாவட்டங்களில், தொழிற்சாலைகள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். கட்டுமானத் தொழில் தொடங்கலாம். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம். பின்னலாடை தொழில்கள் 30% பணியாளர்களுடன் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like