இன்று ஈரோடு மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடல்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் தேர்தல் அன்று பாதுகாப்பு கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் 3-ந் தேதி (அதாவது நேற்று முன்தினம்) முதல் 5-ந் தேதி வரையும் (அதாவது இன்று) 3 நாட்கள் மூட வேண்டும் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.
இதன் காரணமாக 3 நாட்களுக்கு முன்பே மதுபிரியர்கள் தங்களுக்கு தேவையான மது வகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் கலெக்டரின் உத்தரவின்பேரில், ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 182 டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இயங்கும் பார்கள், மதுபான உரிமதலங்கள் நேற்று காலை 10 மணி முதல் மூடப்பட்டன. அதனால் மது வாங்க வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான வருகிற 8-ந்தேதியும் மது விற்பனை நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும் நாட்களில் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.