உரிமம் ஆண்டு முழுவதும் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பால் மகிழ்ச்சி !!

 | 

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழில், வணிக, சேவை நிறுவனங்களின் உரிமம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் தளர்வுகளுடன் நீட்டிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஊரடங்கு காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றன. இந்தநிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய சங்கத்தின் பிரதிநிதிகள் காலாவதியாக உள்ள உரிமங்களை அரசு நீட்டித்து கொடுக்க வேண்டும் என்று கோரினர்.

இந்த கோரிக்கையை ஏற்று, கடந்த மே மாதம் முதல் வருகிற செப்டம்பர் மாதம் வரை காலாவதியாக உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்பு துறை, தொழிலாளர் துறை, தொழிலாளர் பாதுகாப்பு துறை, வணிக உரிமம் உள்ளிட்ட அனைத்து சட்டப்பூர்வமான உரிமங்களும் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளிடம் பெற்ற வணிக உரிமங்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை செல்லும் என தெரிவித்து இருந்தது.

இதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவில், உற்பத்தி, வணிகம், சேவை நிறுவனங்கள் டிசம்பர் மாதம் வரையிலான காலத்துக்குத் தடையில்லாச்சான்று, ஒப்புதல் பெறவும், உரிமம் புதுப்பிக்கவும் வேண்டியதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதன்படி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காலாவதியாக உள்ள அனைத்துச் சட்டப்பூர்வமான உரிமங்கள் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.


newstm.in


 

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP