1. Home
  2. தமிழ்நாடு

மோடி போன்ற தலைவர்கள் 100 வருடம் 200 வருடத்திற்கு ஒரு முறை தான் கிடைப்பார்கள் - அண்ணாமலை!

1

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகளையும் விஜய் அறிவித்தார். அதில் இருமொழிக் கொள்கையே பின்பற்றுவோம் என்று விஜய் அறிவித்தார். அதாவது, தாய் மொழியாக தமிழ், உலகத்திற்கான இணைப்பு மொழியான ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையை தமிழக வெற்றிக் கழகம் பின்பற்றுகிறது. தமிழே ஆட்சிமொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி, தமிழ் வழிக்கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். அரசியல் தலையீடு அற்ற அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் நிர்வாகம், அரசு துறை, தனியார் துறை என்று எந்த துறைகளிலும் அரசியல் தலையீடு அற்ற லஞ்ச லாவண்யம், ஊழல் அற்ற, நிர்வாகத்தை நாம் கொண்டு வருவோம் உள்ளிட்ட கொள்கைகள் அறிவிக்கப்பட்டது.

இருமொழிக் கொள்கைதான் நாங்களும் பின்பற்றுவோம் என விஜய் கூறியுள்ளது பற்றி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைமுகமாக விமர்சித்துள்ளார். அரசியல் படிப்புக்காக லண்டன் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது:-

இரு மொழிக்கொள்கை மட்டும் தான் என புதியதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் சொல்கிறார்கள். 60 ஆண்டுகளாக இருக்கும் கட்சியும் அதைத்தான் சொல்கிறது. மூன்றாம் மொழி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர மாட்டோம் என்று சொல்வது அகங்காரம். அரசியலில் மாற்றம் என்பது சிறிய முன்னேற்றம். ஒரு மனிதனின் முழு வாழ்க்கையும் எடுத்துக்கொண்டாலும் கூட 2 % தான் இலக்கை அடைய முடியும்.

காமராஜர் போன்று இன்னொருவர் நிச்சயம் தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியாது. அதேபோல என்.டி ராமராவ் போல புகழ்மிக்க அரசியல்வாதியாகவும் நிச்சயமாக உருவாக முடியாது. புதிதாக வருபவர்களும் என்னை பொன்றவர்களும் சின்ன சின்ன மாற்றங்கள்தான் செய்யப்போகிறோம். படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். மோடி போன்ற தலைவர்கள் கிடைக்க மாட்டார்கள். எனவே அவர் இருக்கும் பாஜக தமிழகத்திற்கு வேண்டும். மோடி போன்ற தலைவர்கள் 100 வருடம், 200 வருடத்திற்கு ஒரு முறை தான் கிடைப்பார்கள். அப்போது கெட்டியாக பிடித்து கொள்ள வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

முன்னதாக விஜய் நேற்று பேசுகையில், “கொள்கை, கோட்பாடு அளவில் தேசியத்தையும், திராவிடத்தையும் பிரித்து பார்க்க போவதில்லை என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள். நாம் எந்த குறிப்பிட்ட அடையாளத்தின் கீழும் நம்மை சுருக்கி கொள்ளாமல், மதச்சார்பற்ற சமூக நீதிகொள்கைகளை, நமது கொள்கை அடையாளமாக முன்னிறுத்தி செயல்பட போகின்றோம். இருமொழி கொள்கையையே தமிழக வெற்றிக் கழகம் கடைப்பிடிக்கும். இங்கே ஒரு கூட்டம் கொஞ்சம் காலமாக யார் அரசியலுக்கு வந்தாலும் சரி ஒரு குறிப்பிட்ட கலரை அவர்கள் மீது பூசி, பூச்சாண்டி காட்டி, மக்களை ஏமாற்றி, இவங்க மட்டும் மறைமுகமாக டீலிங் வைத்துக்கொண்டு, தேர்தல் நேரத்தில் அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். எப்போது பார்த்தாலும் பாசிசம் என்று சொல்லிக்கொண்டு போகிறார்கள். ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பிரிவினை பயத்தை காட்டி ஒரு சீன் போடுவதே வேலையாக ஆகிவிட்டது. எனவே இனியும் அந்த கலரை.. இந்த கலரை பூசி.. என்னதான் மோடி மஸ்தான் வேலையை செஞ்சாலும் ஒன்னும் நடக்காது, தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள கலரை தாண்டி, யாரும் எந்த கலரையும் அடிக்கவே முடியாது. எங்கள் கோட்பாடே பிறப்பால் அனைவரும் சமம் என்பது தான். இது யாருக்கு நேர் எதிரான கோட்பாடு என்பதை நான் சொல்லியா தெரிய வேண்டும்? இவ்வாறு அவர் பேசினார்.

Trending News

Latest News

You May Like