திருமாவளவனுக்கு தோள் கொடுக்குமா தி.மு.க.,?

தேசிய கட்சி அந்தஸ்து, குறிப்பிட்ட சதவீதத்திலான பாரம்பரிய வாக்கு வங்கி, ஒரு வேளை கூட்டணி வெற்றி பெற்றால், மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு என, பல சாதகமான அம்சங்களை கொண்டுள்ள காங்கிரசுக்கே, தி.மு.க., தலைமை இன்னமும் பிடி கொடுத்து பேசாத நிலையில், திருமா, வைகோ போன்றவர்களுக்கு, தி.மு.க., தோள் கொடுக்குமா என்ற கேள்வி பலமாக எழுவதில் வியப்பேதும் இல்லை.
 | 

திருமாவளவனுக்கு தோள் கொடுக்குமா தி.மு.க.,?

விரைவில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், எந்ததெந்த கட்சிகளிடையே கூட்டணி உடன்பாடு ஏற்படும் என்பதில் இன்னமும் மர்மம் நீடிக்கவே செய்கிறது. 

குறிப்பாக, தமிழகத்தில் தற்போது வலுவான எதிர்க்கட்சியாக உள்ள, தி.மு.க., தலைமையிலான அணியில் இடம் பிடிக்க, பல்வேறு சிறிய கட்சிகள் போட்டியிடுவதாகவே தெரிகிறது. 

எனினும், அ.தி.மு.க.,வின் முக்கிய முகமாக திகழ்ந்த ஜெ., தற்போது உயிருடன் இல்லாதது, தினகரன் தரப்பால் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு, அமைச்சர்கள், மாவட்ட செயலர்களிடையே நிலவும் அதிகாரப் போட்டி உள்ளிட்ட காரணங்களால், அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கி பெருமளவு சிதறும் என, தி.மு.க., தரப்பு கருதுவதாகக் கூறப்படுகிறது. 

இதனால், தி.மு.க.,வின் பாரம்பரிய ஓட்டு, மாநில அரசின் செயல்பாட்டால் அதிருப்தியில் உள்ள நடுநிலையாளர்களின் ஓட்டு, அ.தி.மு.க., அதிருப்தியாளர்களின் ஓட்டு, தவிர, அந்த கட்சி, பா.ஜ.,உடன் கூட்டணி வைத்தால், மத்திய அரசுக்கு எதிரான மன நிலையில் உள்ளவர்களின் ஓட்டு என, பல தரப்பினரின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தி.மு.க., தலைமை உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

எனவே, தமிழகம், புதுச்சேரியை சேர்த்து, 40 மக்களவை தொகுதிகளிலும், தி.மு.க., தனித்து போட்டியிட்டாலும், அனைத்திலும் தங்களுக்கே வெற்றி கிடைக்கும் என, தலைவர் ஸ்டாலினிடம், கட்சியின் தனிப்பட்ட உளவு அறிக்கையில் தெரியவிக்கப்பட்டுள்ளதாம். 

இதனால் தான், தேசிய கட்சியான காங்கிரசிடம் கூட, கூட்டணி குறித்து தி.மு.க., தலைமை இன்னமும் பிடி கொடுத்து பேச மறுக்கிறதாம். 

திருமாவளவனுக்கு தோள் கொடுக்குமா தி.மு.க.,?

இது இப்படி இருக்கையில், பிற கட்சிகளை ஒப்பிடுகையில், மிகப் பெரிய அளவிலான ஓட்டு வங்கி ஏதும் இல்லாத, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அடிக்கடி ‛தங்கள் கட்சி, தி.மு.க., கூட்டணியில் தான் உள்ளது’ என கூறி வருகிறார். ஆனால், தி.மு.க., தலைமையோ, அவரின் பேச்சை  ஆமோதிக்கும் வகையில், இதுவரை ஒரு அறிக்கையும் வெளியிட்டதாக தெரியவில்லை என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள். 

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: ‛‛தமிழகத்தில், அசைக்க முடியாத அரசியல் கட்சியாக தி.மு.க., மட்டுமே உள்ளது. அதனால் தான், இடைத் தேர்தலை நடத்தக்கூட, ஆளும் கட்சி பயந்து நடுங்குகிறது. 

தற்போதுள்ள சூழலில், தி.மு.க., தனித்து போட்டியிட்டாலும், 40லும் வெற்றி பெறும். ஆயினும், கூட்டணி தர்மம், பழைய நண்பர் என்ற அடிப்படையில், காங்கிரசுடனான கூட்டணியை தொடர்வதில் சிக்கல் இருக்காது. 

எனினும், அவர்கள் எதிர்பார்க்கும், இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க கட்சித் தலைமை விரும்பவில்லை. மறைந்த தலைவர் கருணாநிதி அவர்களின் வழியில் செயல்படும் தலைவர் ஸ்டாலின், தேசிய அரசியலில் கட்சியின் உயரத்தை அதிகரிக்க செய்துள்ளார். 

அதனால் தான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தன் தலைமையில் கோல்கட்டாவில் நடந்த கூட்டத்திற்கு தலைவரை அழைத்தார். சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும், தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்.

தவிர, இந்தியாவில் மட்டுமின்றி, ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான, ரிலையன்ஸ் குழும தலைவர், முகேஷ் அம்பானி, தலைவர் ஸ்டாலினை சந்தித்து, அவரின் இல்லத் திருமண விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

தி.மு.க., மற்றும் அதன் தலைவர் ஸ்டாலினின் செல்வாக்கு, மிக உயரத்தை அடைந்துள்ளது. இந்த சூழலில், சிறிய கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கி தந்து, எங்கள் செல்வாக்கை குறைத்துக்கொள்ள கட்சித் தலைமை விரும்பாது. 

காங்கிரசுக்கு ஒற்றை இலக்கத்தில் சில இடங்களை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள பெரும்பாலான தொகுதிகளில், தி.மு.க., தனித்து போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பம்.

திருமாவளவனுக்கு தோள் கொடுக்குமா தி.மு.க.,?

அப்போது தான், மத்தியில் அமையும் ஆட்சியில் முக்கிய இலாக்காக்களை கேட்டுப் பெறுவதுடன், தமிழக நலனுக்கான திட்டங்களை நிதிப்பற்றாக்குறையின்றி நிறைவேற்ற முடியும்’’ என, அந்த கட்சியின் அடிப்படை தொண்டர்கள் முதல் மேலிட தலைவர்கள் வரை, பெரும்பாலானோர் இதே கருத்தை பிரதிபலித்துள்ளனர். 

இந்த சூழல்நிலையில் தான், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தங்கள் கட்சி தி.மு.க., கூட்டணியில் தான் இருப்பதாக அடிக்கடி ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். தவிர, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில், தான் போட்டியிடப்போவதாகவும் கூறி வருகிறார். 

தி.மு.க., கூட்டணியில் இருப்பதாக கூறும் திருமா, அந்த கட்சியின் ஒப்புதல் இன்றியே, தொகுதியை முடிவு செய்தது எப்படி? என்ற கேள்வியும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. திருமா, பல முறை இந்த கருத்தை தெரிவித்தபோதும், தி.மு.க., தரப்பிலிருந்து இதுவரை,  ஒரு முறை கூட, தி.மு.க., கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் நீடிப்பதாக ஸ்டாலினோ அல்லது துரைமுருகன் போன்ற சில முக்கிய தலைவர்களோ பதில் கூறவில்லை. 

திருமாவளவனுக்கு தோள் கொடுக்குமா தி.மு.க.,?

இந்த சூழ்நிலையில் தான், தி.மு.க., கட்சி வட்டாரங்கள் தெரிவித்த தகவலில், சில உண்மைகள் புதைந்திருக்குமாே என்ற ஐயப்பாடு எழுந்துள்ளதாகவும், அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

திருமா, வைகோ, காங்., உள்ளிட்ட யாரிடமும், தி.மு.க., இன்னும் கூட்டணி குறித்து வாய் திறக்கவில்லையாம். இந்நிலையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில், தி.மு.க., - அ.தி.மு.க., என இரு தரப்பிடமும் பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது. 

தேசிய கட்சி அந்தஸ்து, குறிப்பிட்ட சதவீதத்திலான பாரம்பரிய வாக்கு வங்கி, ஒரு வேளை கூட்டணி வெற்றி பெற்றால், மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு என, பல சாதகமான அம்சங்களை கொண்டுள்ள காங்கிரசுக்கே, தி.மு.க., தலைமை இன்னமும் பிடி கொடுத்து பேசாதா நிலையில், திருமா, வைகோ போன்றவர்களுக்கு, தி.மு.க., தோள் கொடுக்குமா என்ற கேள்வி பலமாக எழுவதில் வியப்பேதும் இல்லை. 

அதே சமயம், அவர் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே விட்டுக்கொடுக்கும் படி கோரிக்கை வைத்தால், தி.மு.க., தலைமை அதை ஏற்கவும் அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. 
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP