1. Home
  2. தமிழ்நாடு

இளம் பெண்கள் ஓடிப்போக செல்போன் காரணமா..? - மகளிர் ஆணைய உறுப்பினர் விளக்கம்..!

இளம் பெண்கள் ஓடிப்போக செல்போன் காரணமா..? - மகளிர் ஆணைய உறுப்பினர் விளக்கம்..!

“இளம்பெண்கள் செல்போனில் பேசுவதை கண்காணிக்க வேண்டும். அவர்கள், ஆண்களுடன் பேசுவதற்கும், அவர்களுடன் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கும் செல்போனை பயன்படுத்துகின்றனர்” என்ற மகளிர் ஆணைய உறுப்பினரின் கருத்து சர்ச்சையான நிலையில், அதற்கு விளக்கமளித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மகளிர் ஆணைய உறுப்பினர்களில் ஒருவர் மீனா குமாரி. இவரிடம், ‘மாநிலத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் அதைத் தடுக்கும் திட்டங்கள்’ குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மீனா குமாரி, “இளம் பெண்களுக்கு செல்போன் வழங்கக்கூடாது. அப்படியே கொடுத்தாலும், அடிக்கடி கண்காணிக்க வேண்டும். இது போன்ற குற்றங்களுக்கு எல்லாம் அம்மாக்களின் அலட்சியம்தான் காரணம். பிள்ளைகளை கண்காணிப்பு வளையத்திலேயே வைத்திருக்க வேண்டும். செல்போனில் தொடர்ந்து பேசும் பெண் பிள்ளைகள் ஓடிப்போகிறார்கள்” என்றார். இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் பரவி விவாதத்தையும், எதிர்ப்பையும் கிளப்பியது.

இது குறித்து பேசிய டில்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால், “உத்தரப் பிரதேச உறுப்பினர் கூறுவதுபோல் ஒரு பெண்ணின் கையில் செல்போன் இருப்பது பாலியல் வன்கொடுமைக்கோ, காதலனுடன் ஓடிப்போகவோ காரணமில்லை; மோசமான சமூக அமைப்பே பாலியல் வன்கொடுமைக்கு காரணம்” என்றார்.

இதற்கு விளக்கமளித்துள்ள மீனா குமாரி, “எனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தங்கள் பிள்ளைகள், செல்போனை படிப்புக்காக பயன்படுத்துகிறார்களா அல்லது வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறார்களா என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்றேன்.

பெண்கள் செல்போனை பயன்படுத்தினால் அவர்கள் ஆண்களுடன் ஓடிவிடுவார்கள் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. பெண் பிள்ளைகள் பற்றிய சம்பவங்கள் தனக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்களை பற்றி மட்டுமே பேசினேன்” என்றார்.

Trending News

Latest News

You May Like