1. Home
  2. தமிழ்நாடு

இந்தியாவின் பிரம்மாஸ்திரம் – பாலைவனமாகும் பாகிஸ்தான்!

1

சிந்து நதியின் நீரை நிர்வகிக்கச் சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960 ஆம் ஆண்டு, இந்தியா-பாகிஸ்தான் இடையே கையெழுத்தானது. சிந்து நதியின் துணை நதிகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகிய சிறிய நதிகள் கிழக்கு ஆறுகள் என்றும், ஜீலம்,செனாப் மற்றும் சிந்து ஆகியவை மேற்கு ஆறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் படி, சிறிய கிழக்கு நதிகளின் நீரை இந்தியாவின் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.    மேற்கு நதிகளின் பெரும்பாலான நீரைப் பயன்படுத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

1947,1965, 1971 என மூன்று போர்கள், 1999 கார்கில் போர், மும்பை தாக்குதல் ,நாடாளுமன்ற தாக்குதல், புல்வாமா தாக்குதல் என இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களைப் பாகிஸ்தான் நடத்திய போதும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததில்லை.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைக் காலவரையறை இன்றி நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவை வரவேற்றுள்ள பிரபல Geo Strategy நிபுணர் Brahma Chellaney,  இது இந்திய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், தொடர்ச்சியான துரோகத்தைத் தண்டிப்பதற்கும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நடவடிக்கை ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படை நிபந்தனைகள் சரிந்தால், பாதிக்கப்பட்ட தரப்பினருக்குச் சர்வதேச சட்டத்தின் கீழ் அதை இடைநிறுத்தவோ அல்லது திரும்பப் பெறவோ உரிமை உண்டு என்பதையும் பிரம்மா செல்லனி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் முறையற்ற ஒப்பந்தமாகவே உள்ளது என்று கூறிய அவர், அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார். இந்தியாவின் அசாதாரண தாராள மனப்பான்மையின் செயலாகும். நதிக்கரைக்கு மேலே அமைந்துள்ள இந்தியா, 80 சதவீதத்துக்கும் அதிகமான நீரைப் பயன்படுத்தும் உரிமையைப் பாகிஸ்தானுக்கு ஒதுக்கிக் கொடுத்துள்ளது.

ஒப்பந்தத்தின் படி,   சிந்து நதியின் மொத்த நீரில் 80.52 சதவீதமும் மற்றும் மேற்கு நதிகளின் நீரில் கிட்டத்தட்ட 100 சதவீதமும் பாகிஸ்தானுக்குக் கிடைக்கிறது.  மொத்த சிந்து நதி நீரில் 19.48 சதவீதமே இந்தியாவுக்குக் கிடைக்கிறது. கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்குப் பிறகும், உலகின் மிகவும் தாராளமான நீர் பகிர்வு ஒப்பந்தமாகச் சிந்து நதி நீர் ஒப்பந்தம் உள்ளது.

இந்தியாவின் தாராள மனப்பான்மைக்குப் பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் பாகிஸ்தான்  நன்றி காட்டி வருகிறது என்று தெரிவித்துள்ள Brahma Chellaney பிரம்மா செல்லனி, அப்பாவி பொதுமக்கள் மீது மீண்டும் மீண்டும் பயங்கர வாத தாக்குதல்கள் நடத்த அனுமதிக்கும் பாகிஸ்தான், அமைதியான ஒத்துழைப்புக்காக ஏற்படுத்திய ஒப்பந்தத்தின்  நன்மைகளை இழக்க வேண்டியது நியாயமே என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் பிற வல்லரசுகளும் தேசியப் பாதுகாப்பைக் காரணம் காட்டி ஒருதலைப்பட்சமாக நதிநீர் ஒப்பந்தங்களிலிருந்து வெளியேறியுள்ளதைச்  சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவுக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க முழு உரிமை உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கான முன்னாள் தூதர் சதீஷ் சந்திரா,சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து  பாகிஸ்தான் மீது  இந்தியா ஏவிய  “பிரம்மாஸ்திரம்”  என்று தெரிவித்துள்ளார்.  பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் ராஜ தந்திர நடவடிக்கை பாகிஸ்தானைப் பாலைவனம் ஆக்கும் என்று கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like