அமெரிக்காவில் , புதுமணத் தம்பதிகளின் ஏற்பாட்டில் ஆன்லைனில் நிழற் கூத்து..

அமெரிக்காவில் , புதுமணத் தம்பதிகளின் ஏற்பாட்டில் ஆன்லைனில் நிழற் கூத்து..

அமெரிக்காவில் , புதுமணத் தம்பதிகளின் ஏற்பாட்டில் ஆன்லைனில் நிழற் கூத்து..
X

ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட , அரிச்சந்திரன், நளாயினி போன்ற புராணக் கதைகளை பதப்படுத்தப்பட்ட தோல் மீது வண்ணம் தீட்டப்பட்ட ஓவியங்களுடன், வெண் திரைக்கு உள்புறம் இருந்து , வெளியே உள்ள பார்வையாளர்களுக்கு கதையும் காட்சியுமாக சொல்வார்கள்.

உடன் இசை, பாடல் என அன்றையத் திரைப்படங்களுக்கு முன் மாதிரியாக இருந்தன இந்த பாவைக் கூத்து நிகழ்ச்சிகள். வார இறுதியில், அல்லது வாரம் முழுக்கவும் கூட நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி மூலம் முழு புராணக் கதைகளும் சொல்லி முடிக்கப்படும்.

முந்தைய நாள் விட்ட இடத்திலிருந்து அடுத்த நாள் தொடர்வார்கள். இன்று என்ன நடக்கும் என்ற ஆர்வத்துடன் சிறுவர்கள், பெரியவர்கள் என ஊரே திரண்டு செல்லும். அந்த வகையில் தொலைக்காட்சி சீரியல் நிகழ்ச்சிகளுக்கு முன்னோடி இந்த பாவைக் கூத்து என்று கூட சொல்லலாம்.

நாளடைவில் டூரிங் டாக்கீஸ், தொலைக்காட்சி என கிராமப்புறங்களும் நவீனமயமாக, இத்தகைய மரபுக் கலை நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு குறையத் தொடங்கியது. ஆனாலும், திருவிழாக் காலங்களில் இன்னமும் கிராமங்களில் மரபுக் கலை நிகழ்ச்சிகளுக்கும் இடம் இருந்தே வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள சில முக்கிய மரபுக் கலைக் குழுக்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நிகழ்ச்சி நடத்தி, இந்த கலையை தலை முறை கடந்தும் காத்து வருகிறார்கள்.

கொரோனா காலத்தில் திருவிழாக்கள் உள்பட பொது நிகழ்ச்சிகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பாரம்பரிய கலைஞர்கள் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். களரி தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டு மையம் சார்பில் மு.ஹரிகிருஷ்ணன் ஆன்லைன் மூலம் இத்தகைய கலை நிகழ்ச்சிகளை நடத்தி , கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் நிதியுதவியும் பெற்றுத் தரும் முயற்சியை முன்னெடுத்துள்ளார்.

குடும்ப நிகழ்ச்சிகளுக்கு ஆன்லைன் மூலம் மரபுக் கலை நிகழ்ச்சிகளை நடத்தி, கலைஞர்களுக்கு ஆதரவு தருமாறு கோரிக்கையும் விடுத்துள்ளார் ஹரிகிருஷ்ணன். இந்நிலையில், சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருந்த திருமண விழாவை , அமெரிக்காவில் வீட்டிலேயே எளிமையாக நடத்திய ராமு-பூஜா தம்பதியினர், தங்கள் திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆன்லைன் மூலம் தோற்பாவை நிழற் கூத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

மணமகனின் பெற்றோர் வேலு-விசாலாட்சி தம்பதியினர், களரி தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டு மையத்துடன் தொடர்பு கொண்டு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளனர்.

சேலம் அம்மாபேட்டை கணேசன், தவசி, பெருமாள், நாகமரை குமார், சுப்பிரமணி, தனபால், ராகவன், பிரபு, மோகன்ராம் குழுவினர் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக சீதை கல்யாணம் – தோற்பாவை நிழற் கூத்து நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

ஃபேஸ்புக் லைவ் மூலம் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை வீட்டில் உள்ள தொலைக்காட்சி மூலமாகவும் தமிழ்நாடு மற்றும் அமெரிக்காவிலிருந்து பார்த்து ரசித்துள்ளனர். குடும்ப விழாக்களில் மரபுக் கலைஞர்கள் பங்கேற்பில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவது, கலைகளை பாதுகாக்க உதவுவதுடன் , சிறுவர்கள் உள்பட இன்றைய தலைமுறையினருக்கு வீட்டிலிருந்தவாறே மரபுக் கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. கொரோனா காலத்தில் இத்தகைய புதிய முயற்சிகளும் வாய்ப்புகளும் உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newstm.in

Next Story
Share it