1. Home
  2. தமிழ்நாடு

நான் பேசியது தமிழிசையை காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன் – திருமாவளவன்..!

1

“மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், காந்தியை தவிர்த்துவிட்டு, காமராஜர் நினைவிடத்தில் மட்டும் மரியாதை செலுத்தி உள்ளார். மது ஒழிப்பை வலியுறுத்த முடியவில்லையே என்ற குற்ற உணர்வு காரணமா என்பது தெரியவில்லை” என்பன உள்ளிட்ட விமர்சனங்களை விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக தமிழிசை முன்வைத்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக விசிக மாநாட்டில் திருமாவளவன் பேசும்போது, “நேரமின்மை காரணமாக காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்த முடியாததால் காந்தியின் கொள்கைக்கு நான் எதிரானவன், அதாவது நாள்தோறும் மது அருந்துவேன் என்று தமிழிசை சொல்வதாகத் தெரிகிறது. அவர் குடிக்க மாட்டார் என நம்புகிறேன். அவரைப் போல் எனக்கும் அந்த பழக்கம் கிடையாது” என தெரிவித்திருந்தார்.

இவ்வாறு இரண்டு தலைவர்களும் பேசியது சர்ச்சையானது. இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவனிடம் தனியார் தொலைக்காட்சி பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு திருமாவளவன் அளித்த பதிலில் கூறியதாவது:-

என்ன குற்றவுணர்வு? மது ஒழிப்புக்காக போராடிய காந்தி பிறந்தநாளில் மாநாடு நடத்தினோம். அவரது சிலைக்கு மரியாதை செலுத்த சென்றபோது, ஆளுநர் வந்த பிறகு தான் அனுமதிக்க முடியும் என காவல் துறையினர் தெரிவித்தனர். மாநாட்டுக்குச் செல்ல வேண்டியிருந்ததால் காத்திருக்க முடியவில்லை. இதில் குற்றவுணர்வு என எதைச் சொல்கிறார். அவர் சொன்னதை பொதுமக்கள் என்னவாக புரிந்து கொள்வார்கள்.
எனக்கு ஏதோ ஈடுபாடு இருப்பதாக மறைமுகமாக சொல்ல வந்தார். எனவே, உங்களைப் போல் தான் நானும் என்று சொன்னேன். இதில் தரம் தாழ்ந்து பேச என்ன இருக்கிறது என தெரியவில்லை. இது அவரை காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.

எனக்கு அவருடன் நீண்ட கால பழக்கம் இருக்கிறது. முன்னாள் ஆளுநர் தமிழிசை, அவரது கணவர், அவரது தந்தை ஆகியோர் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. அவரது தந்தை மாநாட்டை பாராட்டி 2 பக்க வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அதை நேரமின்மை காரணமாக படிக்க முடியாமல் போனது. அப்படி நாங்கள் பெரிதும் மதிக்கக் கூடிய குடும்பத்தை சார்ந்தவர் அவர். அதில் மாற்றுக் கருத்தில்லை. என்னைக் காயப்படுத்தும் வகையில் பொதுமக்களிடையே திருமாவளவனுக்கு மது ஒழிப்பு கொள்கையில் முரண்பாடு இருப்பதாக சொன்னதால் நான் பதிலளித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like