இப்படி நடந்தா எப்படி சொந்த ஊர் செல்வது..? குமுறும் பயணிகள்..!
டிசம்பர் 24 முதல் அடுத்த 9 நாட்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் இன்று முதலே விடுமுறை தொடங்கிவிட்டது. இதனால் பலரும் வெளியூர் பயணங்களுக்கு திட்டமிட்டுள்ளனர்.
ரயில்களில் முன்கூட்டியே அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிட்டன. தட்கல் புக்கிங் ஒன்று தான் வழி. அதுவும் அனைத்து பயணிகளுக்கும் கிடைப்பது சாத்தியமில்லை. எனவே பலர் விமானப் பயணத்தின் பக்கம் திரும்பியுள்ளனர். எப்படி ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ, அதேபோல் தான் விமானப் பயணக் கட்டணமும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களின் கட்டணத்தை எடுத்து பார்த்தால் பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. சென்னை - திருவனந்தபுரம் விமானத்தில் டிக்கெட் கட்டணம் 11,000 ரூபாயை தாண்டிவிட்டது. இதேபோல் சென்னை - தூத்துக்குடி வழித்தடத்தில் 11,600 ரூபாய், 14,200 ரூபாய் என டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை - மதுரை வழித்தடத்தில் 17,600 ரூபாய் என கட்டணம் பலமடங்கு உயர்ந்து காணப்படுகிறது. சென்னை - திருச்சி விமானங்களில் குறைந்தபட்ச டிக்கெட் 14,000 ரூபாய்க்கு மேல் தான் இருக்கிறது. வழக்கமான கட்டணம் 2,300 ரூபாய் என்ற அளவில் இருந்தது. சென்னை - கோவை விமான கட்டணம் 10,000 ரூபாயை தாண்டிவிட்டது.
வழக்கமான கட்டணம் 3,400 ரூபாய் என்ற அளவில் தான் இருந்தது. சென்னை - கொச்சி வழித்தடத்தில் விமான கட்டணம் 18,300 ரூபாய் என்ற அளவில் எகிறிவிட்டது.