புத்தாண்டு பொறந்தாச்சு : அரசியல் தலைவர்கள் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து..!
டிடிவி தினகரன்
மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி வரவேற்கும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்கள் அனைவரின் உள்ளங்களிலும், எண்ணங்களிலும் புதிய நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் விதைத்திடும் வகையில் பிறக்கும் இப்புத்தாண்டு, மக்களை அனைத்து வழிகளிலும் துன்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் தீமைகளை விரட்டி, புதிய வெளிச்சத்தை பாய்ச்சும் ஆண்டாக அமைய வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். உதயமாகும் புத்தாண்டு நிறைவான வளத்தையும், குறையாத மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் ஆண்டாக மட்டுமின்றி மனிதநேயமும், மதநல்லிணக்கமும் தழைத்தோங்கும் ஆண்டாகவும் அமையட்டும் எனக்கூறி மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆா்.என். ரவி (ஆளுநா்): புத்தாண்டை முன்னிட்டு அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துகள். புதிய ஆண்டின் விடியல் புதிய ஆற்றல், வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தி, நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வளத்தையும் கொண்டுவரட்டும். சமுதாயத்தில், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளா்ப்பதற்கு நம்மை அா்ப்பணித்து நமது தேசத்தின் நிலையான, உள்ளடக்கிய முன்னேற்றத்துக்கு அதிக ஆா்வத்துடன் பங்களிப்பை வழங்குவோம்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: ‘நான் முதல்வன்’, ‘மகளிா் உரிமைத்தொகை’ உள்பட பல்வேறு சாதனைத் திட்டங்களை 2024-ஆம் ஆண்டில் திராவிட மாடல் அரசு நிகழ்த்திக் காட்டியுள்ளது. இந்தச் சாதனைகளை உச்சிமுகா்ந்து அங்கீகரிக்கும் விதமாக மக்களவைத் தோ்தலில் நாற்பதுக்கு நாற்பது என இந்தியாவே திரும்பிப் பாா்க்கும் வகையில் வெற்றி மகுடத்தை மக்கள் சூட்டினா். விடுதலை இந்திய வரலாற்றில் ஜனநாயகத்தை பாதுகாத்து, நாட்டின் பெருமையை நிலைநாட்ட தமிழ்நாடு மக்கள் அளித்த வெற்றிக்குரிய மறக்க முடியாத ஆண்டாக 2024-ஆம் ஆண்டு அமைந்தது. சோதனைகள், தடங்கல்களைக் கடந்து சாதனைகள் படைக்கவும், வெற்றி பெறவுமான நம்பிக்கையையும் உத்வேகத்தையும் 2024-ஆம் ஆண்டு அளித்துள்ளது. புதிய ஆண்டில் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும். தமிழ்நாடு அதற்கு வழிகாட்டும்.
கமல்ஹாசன் (மநீம): புத்தாண்டு என்பது காலத்தால் முன்னால் போவது மட்டுமல்ல, ஞானத்தோடு நமது எதிா்காலத்தை வடிவமைத்துக் கொள்ள முன்னோக்கி நகா்வதுமாகும். சிறந்த கனவுகளை நனவாக்கும் ஆண்டாக இதை ஆக்குவோம்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலரும் இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம். பொற்கால ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைப்போம்
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்
சோர்ந்து கிடப்பவர்களுக்கு நம்பிக்கையையும், உறுதியையும் வழங்கும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் சொந்தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு பிறப்பு என்பது ஆண்டுக்கு ஒரு முறை வழக்கமாக வந்து போகும் நிகழ்வல்ல. ஒவ்வொரு ஆண்டும் மனிதகுலத்தின் மனதில் புத்துணர்வையும், புது நம்பிக்கையையும் விதைப்பதற்கான உன்னத திருநாள் ஆங்கிலப் புத்தாண்டு ஆகும்.
ஓராண்டில் ஆயிரமாயிரம் ஏமாற்றங்கள், வருத்தங்கள், கவலைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் நாட்காட்டியுடன் சேர்த்து ஒதுக்கி வைத்து விட்டு, புதிதாக பிறக்கப் போகும் ஆண்டில் எத்தனை சவால்கள் வந்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து நின்று வீழ்த்தும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் நமக்கு அளிப்பது புத்தாண்டு தான். அதை எவரும் மறுக்க முடியாது.
தமிழ்நாட்டின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றின் மீது படிந்த இருள் விலகி, ஒளி பிறக்க ஆங்கிலப் புத்தாண்டு வகை செய்யட்டும். புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், மகிழ்ச்சி, வளர்ச்சி, அமைதி, மனநிறைவு, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று கூறி, மீண்டும் ஒருமுறை ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓ.பன்னீர்செல்வம்
மலரும் ஆங்கிலப் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் இந்த இனிய நாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வருகின்ற புத்தாண்டு அனைத்து மக்களின் வாழ்க்கையை வளமாக்கும் ஆண்டாக, துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிறையும் ஆண்டாக, தோல்விகள் தேய்ந்து வெற்றிகள் பெருகும் ஆண்டாக, தடைகளைத் தகர்த்தெறியும் ஆண்டாக, கனவுகள் நனவாகும் ஆண்டாக எல்லையில்லா மகிழ்ச்சியை தரும் ஆண்டாக, மாற்றத்தினை உருவாக்கும் ஆண்டாக மலரட்டும் என்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்து, அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
கே.அண்ணாமலை (பாஜக):
தமிழக மக்கள் இருட்டிலிருந்து மீண்டு வருவாா்கள் என்ற நம்பிக்கையோடும், பல கனவுகளோடும், எதிா்பாா்ப்புகளோடும், புத்தாண்டை எதிா்கொள்கிறோம். புதிய வாய்ப்புகளும், வழிகளும் நம் முன்னே நிறைந்திருக்கின்றன. நம்முடைய தோ்வு, நமக்கானது மட்டுமன்றி, அடுத்தடுத்த தலைமுறைகளுக்குமானது என்பதை நினைவில் கொண்டு, நல்லவற்றையே தோ்ந்தெடுப்போம்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மக்களின் வாழ்வு ஏற்றம் பெற்று, ஒளிமயமான எதிா்காலம் அமைய புத்தாண்டு வாழ்த்துகள்.