பெரும் சவால்.. 3ஆவது முறையாக மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார் மம்தா ! 

 | 

மேற்கு வங்காள சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில், 213 தொகுதிகளில் வெற்றி பெற்று மம்தா பானர்ஜி 3ஆவது முறையாக ஆட்சியை பிடித்தார்.

இந்தநிலையில் மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவி ஏற்கும் ஏற்பாடுகள் நேற்று தொடங்கின. நேற்றுமுன்தினம் மம்தா பானர்ஜி ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.  அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஜகதீப் தங்கர் , ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். 

இதனையடுத்து, இன்று 3வது முறையாக மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஜகதீப் தங்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 
கொரோனா நோய் பரவல் காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற்றது. இதனால் பிற மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை.

மேற்குவங்க மூத்தத் தலைவரான புத்ததேவ் பட்டசார்ஜி, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் மன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பீமன் போஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, தேர்தல் வியூகவியலாளர் பிரசாந்த் கிஷோர், கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி ஆகியோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்ததால் தற்போது எம்.எல்.ஏ.வாக இல்லை. அடுத்த 6 மாதத்துக்குள் அவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட வேண்டும். எனவே திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் யாராவது ஒருவர் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP