தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தாவின் சொத்துக்களை அரசே எடுத்துக்கொள்ள வேண்டும்: கி.வீரமணி!
நித்தியானந்தா சீடர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, “நித்யானந்தாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது. ஆனால், நீதிமன்றத்திற்கு அவர் வருவதே இல்லை. முதலில் அவரை நீதிமன்றத்தில் ஆஜராகச் சொல்லுங்கள். கடவுளின் அவதாரம் என்று சொல்லிக்கொண்டு அவர் நீதித் துறைக்கு சவால் விடுகிறார்” என்றெல்லாம் கருத்து தெரிவித்து இருந்தது.
இதுதொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் பிறப்பித்தும் தலைமறைவாக இருந்துகொண்டு, இந்திய நீதித் துறைக்கே சவால்விடும் நித்தியானந்தா என்ற ஒரு மோசடிப் பேர்வழி. அவரின் சொத்துகளை அரசு பாதுகாக்க வேண்டுமா என்ற நியாயமான கேள்வியை, உயர்நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி எழுப்பியுள்ளார். வரவேற்கத்தக்க நியாயமான கேள்வி இது.
இந்த நித்தியானந்தா என்பவரின் பூர்வ வரலாறு தெரிந்தவர்கள் பலரும் திருவண்ணாமலை மற்றும் வேறு பல ஊர்களிலும் இருக்கவே செய்கிறார்கள். மறைந்த பழைய மதுரை ஆதீனமும் இந்த மோசடிப் பேர்வழியிடம் ஏமாந்து, பிறகு ஒருவகையாக கரை சேர்ந்து மீண்ட கதை நாடறிந்த ஒன்றாகும்.
நித்தியானந்தா சீடரின் வழக்கில் நீதிபதி,நித்தியானந்தா தலைமறைவாக இருந்துகொண்டு இந்திய நீதித் துறைக்கே சவால் விடுகிறார். அவருக்கு எதிராக பல வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது. இவரது சொத்துகளுக்குப் பாதுகாப்புத் தருவது உகந்ததா? என்ற பொருத்தமான கேள்வியையும் எழுப்பினார்.
நித்தியானந்தாவின் சொத்துகளை அரசுகள் எடுத்துக்கொள்ள முழு நியாயமும், தகுதியும் சட்டப்படி இருக்கிறது. உடனடியாக அதுபற்றி அரசுகள் சிந்தித்து செயலாற்ற தாமதிக்காமல் முன்வரவேண்டும். சாதாரண மோசடிக்காரர்களை உடனடியாக விரைந்து கைது செய்யும் அரசும், தண்டிக்கும் நீதிமன்றங்களும் இதுபோன்ற கொள்ளைத் திமிங்கலங்களின் திமிர்வாத நடவடிக்கையை அனுமதிப்பது, சட்டத்தின் ஆட்சிக்கே சவாலானதல்லவா?.
உடனடியாக தமிழ்நாடு அரசு இதற்கென தனிப் பிரிவை காவல்துறையில் உருவாக்கி, இந்தப் பகற்கொள்ளை படாடோப பம்மாத்துப் பேர்வழிகளி்ன் கொட்டத்தை அடக்கிட முன்வரவேண்டியது காலத்தின் தேவையாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.