இனி தனியார் சொத்துகளை கையகப்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை : உச்ச நீதிமன்றம்..!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, சுதன்ஷு துலியா, ஹிருஷிகேஷ் ராய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, ராஜேஷ் பிண்டல், எஸ்.சி.சர்மா, ஏ.ஜி.மசிஹ் ஆகிய 9 நீதிபதிகள் வழக்கை விசாரித்தனர். வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு 7:2 என்ற விகிதத்தில் வழங்கப்பட்டுள்ளது.
மூன்று தனித்தனி தீர்ப்புகள் எழுதப்பட்டன. தலைமை நீதிபதி தனக்காகவும், ஆறு சக நீதிபதிகளுக்காகவும் ஒரு தீர்ப்பை எழுதினார். நீதிபதி பி.வி. நாகரத்னா தனியாக ஒரு தீர்ப்பை எழுதினார். நீதிபதி சுதன்ஷு துலியா மாறுபட்ட தீர்ப்பை எழுதினார். தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட 7 நீதிபதிகள், “பொது நன்மை”க்காக தனியாருக்குச் சொந்தமான அனைத்து வளங்களையும் எடுத்துக் கொள்ள அரசியலமைப்பின் கீழ் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தது. அதேநேரத்தில், விதிவிலக்கான சில வழக்குகளில் தனியார் சொத்துகள் மீது அரசு உரிமை கோரலாம் என்றும் 7 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
இதன்மூலம், அரசியலமைப்பின் 39(பி) பிரிவின் கீழ் தனியாருக்குச் சொந்தமான அனைத்து வளங்களையும் அரசு கையகப்படுத்தலாம் என்ற நீதிபதி கிருஷ்ண ஐயரின் முந்தைய தீர்ப்பை, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு ரத்து செய்துள்ளது. அதேநேரத்தில், நீதிபதி பி.வி.நாகரத்னா, தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகளின் பெரும்பான்மைத் தீர்ப்பை ஓரளவு ஏற்கவில்லை. அதேசமயம் நீதிபதி சுதன்ஷு துலியா அனைத்து அம்சங்களிலும் மாறுபட்டு தீர்ப்பளித்துள்ளார்.