குட் நியூஸ்..! இந்தியர்களுக்கான இலவச விசா டிசம்பர் 31 வரை நீட்டிப்பு
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மலேசியா சுற்றுலாத்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: இந்தியா - மலேசியா இடையில் நல்ல நட்புறவு நீடித்து வருகிறது. குறிப்பாக உலகளவில் இருந்து மலேசியாவுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கையில் சிங்கப்பூர், இந்தோனேசியா, சீனா, தாய்லாந்து நாடுகளை தொடர்ந்து இந்தியா 5-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த 2023 டிசம்பர் மாதம், இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு 30 நாட்களுக்கான இலவச விசா மலேசிய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், கடந்த ஓராண்டில் (2024) மட்டும் இந்தியாவில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மலேசியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
இதில் 71.7 சதவீதம் தென் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் மலேசியா சுற்றுலாத்துறையில் தமிழகம் மிகவும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மலேசியாவுக்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் 30 நாட்களுக்கான இலவச விசா வரும் 2026 டிச.31-ம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
மலேசியா நாட்டின் வளமான கலாச்சாரம், பாரம்பரியமிக்க மக்களின் வாழ்க்கை முறை, அழகிய கடற்கரைகள், மலை பிரதேசங்கள், எழுச்சி மிகு நகரங்கள் போன்றவற்றை பார்த்து ரசிப்பதற்கான வாய்ப்பாக இந்த அறிவிப்பு அமையும் என நம்புகிறோம். அந்தவகையில் நடப்பாண்டில் (2024-25) இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 13 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். இதற்காக கூடுதல் விமானங்களை இயக்கவும் திட்டமிட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக மலேசியா சுற்றுலாத்துறை சார்பில் நடப்பாண்டுக்கான ‘விசிட் மலேசியா 2026’ லச்சினை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் மலேசியா குடியுரிமை அதிகாரி சுக்மாவதி பிந்தி முகமது இட்ரிஸ், மலேசியா சுற்றுலாத்துறையின் சந்தைப்படுத்துதல் பிரிவு (சென்னை) அதிகாரி சயீத் அன்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.