நூதன முறையில் மோசடி..! 10 ரூபாய்க்கு சாப்பாடு போட்டு 100 கோடி மோசடி!

சேலத்தில் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்த மோசடி கும்பல் மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் ரூ.10-க்கு உணவு வழங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரிக்கவும் பணம் முதலீடு செய்தால் 7 மாதங்களில் இரட்டிப்பாகத் திரும்பக் கிடைக்கும் என விளம்பரம் செய்துள்ளது.
விளம்பரத்தை நம்பி பலரும் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம்வரை பணத்தை போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்துள்ளனர். நேற்று, ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் இரண்டு நாட்களில் ரூ.2 லட்சம் கிடைக்கும் என இந்த மோசடி கும்பல் விளம்பரம் செய்துள்ளது.
இதனை நம்பி மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால், போலீசார் அங்கு வந்து விசாரிக்க அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மாநகர போலீசார் குவிக்கப்பட்டு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உள்ளே சென்று விசாரணை நடத்தியதில் எந்த ரசீதும் கொடுக்காமல் ரூ.100 கோடிவரை வசூலித்து மோசடி செய்ய இருந்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அறக்கட்டளையை நடத்தும் விஜயா பானு மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
திருமண மண்டபத்திலிருந்து ரூ.12 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து விஜயா பானு, ஜெயப்பிரதா மற்றும் பாஸ்கர் என 3 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.