ஊசலாடும் விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் உயிர்..!
பஞ்சாப் விவசாயிகள் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை இன்று டிசம்பர் 20ம் தேதி 25வது நாளாகத் தொடர்ந்து வருகிறார். நேற்று கீழே விழுந்து மயக்கமடைந்த நிலையில், அவரது உயிர் ஒரு இழையில் பிடிபட்டிருக்கிறது. உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருப்பதாகவும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் அறிவித்தனர்.
கானௌரி எல்லைப் போராட்டத் தளத்தில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், டல்வாலுக்கு கார்டியாக் ஆரெஸ்ட் மற்றும் பல உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
ஜக்ஜித் தலேவால் (70) என்ற விவசாயி பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான கானௌரி எல்லைப் பகுதியில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு, பயிர்களுக்கு MSP சட்டப்பூர்வ உத்தரவாதம் உட்பட, போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்குமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
கானௌரி எல்லையில் அவரது உடல்நிலையைப் பரிசோதித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்கள், "கடந்த 25 நாட்களாக டல்வாலுக்கு எந்த விதத்திலும் உணவை உட்கொள்ளவில்லை. இதன் காரணமாக அவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். மேலும் அவருக்கு மாரடைப்பு மற்றும் பல உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உள்ளது. நாங்கள் அவரை தினமும் கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவித்தனர்.
"இன்று அவரது இரத்த அழுத்தம் குறைந்துவிட்டது. நாங்கள் அவரது கால்களை உயர்த்தி மசாஜ் செய்தோம். ஆனால் அவரது நிலைமை மிகவும் மோசமாகி இருக்கிறது. அவரது உயிர் இப்போது ஒரு நூலிழையில் தொங்குகிறது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு காரணமாக, அவருக்கு எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு ஏற்படலாம். அவரது நிலைமை மோசமாக உள்ளது" என்றனர்.
நேற்று மதியம் 2.20 மணியளவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உச்ச நீதிமன்றத்தில் டல்வால் விசாரணையில் ஆஜரானார். அப்போது சுமார் 12-15 நிமிடங்கள் இணைப்பில் இருந்தார். ஆனால் இணையவசதி சரியில்லாததால் இணைப்பு துண்டிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.
"நாங்கள் போராடும் பிரச்சினைகள் எங்கள் கோரிக்கைகள் மட்டுமல்ல, வெவ்வேறு அரசாங்கங்களால் எங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் என்பதையும் நாங்கள் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்" என்று விவசாயிகள் சங்க தலைவர் கோஹர் கூறினார்.
இதற்கிடையில், தலேவாலின் உடல்நிலை குறித்து விசாரிக்க அரசியல் தலைவர்கள் கானௌரி எல்லைக்கு தொடர்ந்து வந்தனர்.
அகாலி தலைவர் பல்விந்தர் சிங் புந்தர், ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் புள்ளிகளில் முகாமிட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார். ஷிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) தலைவர் சிம்ரன்ஜித் சிங் மான், டல்வாலின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
சத்ரோத் காப் தலைவர் சதீஷ் குமார், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தினார். சமீபத்தில் ஹரியானா பாதுகாப்பு படையினர் டெல்லியை நோக்கி நடைபயணமாக செல்ல முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
இதற்கிடையில் காங்கிரஸ் தலைவரும், ஹரியானா முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா நேற்று விவசாயிகள் பிரச்சினையை அரசு கவனத்தில் கொண்டு விரைவில் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.