பிரபல ஆர்ஜே அனன்யா மரணம்..!

 | 

கேரளாவில் முதல் திருநங்கை ரேடியோ ஜாக்கி (ஆர்.ஜே) அனன்யா குமாரி அலெக்ஸ், கொச்சியில் உள்ள அவருடைய குடியிருப்பில் நேற்று மாலை சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த மரணம் குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார் அனன்யா. ஆனால், இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை தனது சிகிச்சை பதிவுகளை கொடுக்க மறுத்து வருகிறது என்றும் அனன்யா கூறி வந்தார். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஒரு வருடமாக, பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் மீது சமீபத்தில் அனன்யா குற்றம் சாட்டியிருந்தார்.

இது குறித்து, இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் நீண்ட நேரம் நிற்கும்போது, தும்மும் போது, சிரிக்கும் போது அல்லது பல் துலக்கும் போது கூட கடுமையான அசௌகரியங்களை எதிர்கொள்கிறேன். மேலும், சுவாச சிரமங்களையும் அனுபவித்து வருகிறேன்.

சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டேன். நான் நினைத்ததற்கு மாறாக இந்த அறுவைச் சிகிச்சையில் எனது தனிப்பட்ட பகுதி கத்தியால் இரக்கமின்றி வெட்டப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியாவின் மற்ற இடங்களில் வெற்றிகரமாக இந்த அறுவைச் சிகிச்சை நடத்தப்படுகிறது.

ஆனால், இங்கு நிலைமை வேறு. ஒரு மருத்துவ அலட்சியத்தின் பலியாக நான் உங்கள் முன் நிற்கிறேன். அறுவைச் சிகிச்சைக்கு பிறகு என் பிறப்புறுப்பு பகுதியில் கடுமையான வலி உள்ளது. இது விவரிக்க முடியாது. சில நேரங்களில் என்னால் உட்கார முடியாது" என்று வேதனையுடன் பேசியிருந்தார். 

இந்நிலையில், அனன்யா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் கேரள போலீசார், “இது ஒரு தற்கொலை என்று சந்தேகிக்கப்படுகிறது, பிரேத பரிசோதனை செய்து அதன் முடிவுகள் வந்த பின்னரே கூடுதல் விவரங்களை கூற முடியும்” என்று தெரிவித்துள்ளனர்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP