பிரபல ரவுடி வெட்டிக் கொலை..!

ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு லட்சுமி நகர் பகுதியில் சேர்ந்தவர் அன்பு (வயது 32). ரவுடி. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர்மீது காவல் நிலையங்களில் சில வழக்குகள் உள்ளன.
மேலும் பிரபல தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ரவுடி திலீப்பின் கூட்டாளியாவார்.
இவர் இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 8.30 மணிக்கு வழக்கம்போல் அங்குள்ள ஜிம்முக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் தெரு சுற்றுலா வாகன பார்க்கிங் பகுதியில் வந்தபோது இரு வேறு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கும்பல் அவரைப் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு உயிருக்குப் பயந்து ஓடினார். ஆனால் அந்தக் கும்பல் விடாமல் அவரைத் துரத்திச் சென்று பார்க்கிங் பகுதியில் சுற்றி வளைத்துச் சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில் தலை, கழுத்து, கைகளில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஏற்படுத்தியது.
பின்னர் உயிருக்குப் போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அன்பு இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட அன்புவுக்கு மனைவி மற்றும் இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதுபற்றித் தகவல் அறிந்த மனைவி மற்றும் உறவினர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் திரண்டனர்.
மேலும் கொலை நடந்த பகுதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வரும் வெளிமாநில மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளின் வாகன நிறுத்தமிடமாகும்.
கொலையாளிகள் அன்புவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்வதை பார்த்து வெளியூர் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மேலும் அந்த வழியாக வந்த பள்ளி மாணவ மாணவிகளும் நாலா புறமும் சிதறி ஓடினர். சம்பவம்குறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபானந்தம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட அன்புவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை முன்பு கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்திச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களைச் சமரசம் செய்தனர். இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.