1. Home
  2. தமிழ்நாடு

முன்ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணம் : வசை பாடிய வழக்கறிஞர் மனு தள்ளுபடி..!

முன்ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணம் : வசை பாடிய வழக்கறிஞர் மனு தள்ளுபடி..!


“பெண் வழக்கறிஞரின் செயல்பாடு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவத்தில் முன்ஜாமீன் வழங்கினால், தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் எனக் கூறி, பெண் வழக்கறிஞர் தனுஜாவின் முன்ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சென்னை சேத்துபட்டு சிக்னலில் கடந்த வாரம், டிராஃபிக் எஸ்ஐ ஆனந்தன், ஏட்டு ரஜித்குமார் உள்ளிட்ட போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றியதாக சட்டக்கல்லூரி மாணவி ப்ரீத்தி ராஜனுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதனால் ஆவேசமடைந்த பிரீத்தியின் தாயாரும் வழக்கறிஞருமான தனுஜா ராஜன், போலீஸாரை தரக்குறவாகப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.இதையடுத்து, தனுஜா ராஜன் மற்றும் அவருடைய மகள் பிரீத்தி மீது, ‘போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தல்’, ‘கொலை மிரட்டல் விடுத்தல்’ உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி இருவருக்கும் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி செல்வக்குமார் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “ப்ரீத்தி ராஜன் மீன் வாங்கச் செல்லவில்லை; மருந்து வாங்கச் சென்றவரை போலீஸார் மறித்து அபராதம் விதித்ததால்தான் தனுஜா ராஜன் அது தொடர்பாக விளக்கம் கோரியுள்ளார்.

போலீஸார் பேசிய மோசமான வார்த்தைகள் ‘எடிட்’ செய்யப்பட்டு, தனுஜா பேசியது மட்டும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மனுதாரர் உணர்ச்சி வசப்பட்டே அவ்வாறு நடந்துள்ளார். எனவே, அவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.

ஆனால் அரசு தரப்பில், “மனுதாரர்கள் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். எனவே, முன்ஜாமீ்ன் வழங்கக்கூடாது” என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ”வழக்கறிஞரின் செயல்பாடு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவத்தில் முன்ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்” எனக் கூறி, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Trending News

Latest News

You May Like