யாரும் பயப்பட வேண்டாம்..! மழை நீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - சென்னை மேயர்..!
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சென்னையில் வரும் 14, 15ம் தேதிகளுக்குப் பிறகு கனமழை இருக்கும் என வானிலை மையம் கூறியிருக்கிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். துணை முதல்வரும், ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அமைச்சர்களும், எந்தெந்த பகுதிகளில் எல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கிறதோ, அந்தப்பகுதிகளில் எல்லாம் அவர்களும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் பெய்த மழையின்போது, சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது கண்டறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்துக்கும் மேலாக எந்தெந்த பகுதிகளில் எல்லாம் தண்ணீர் தேங்கி நின்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் வரக்கூடிய நாட்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மோட்டார் தேவையான பகுதிகள், தேங்கி நிற்கும் தண்ணீரை குழாய்கள் மூலம் மழைநீர் வடிகாலுக்குள் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்று மேயர் பிரியா கூறினார்.
முன்னதாக, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென்மேற்குவங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அதற்கடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழக – இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். அதேபோல, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவுப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வரும் 11-ம் தேதி கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வரும் 12-ம் தேதி சில இடங்களிலும், வரும் 13, 14-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.